கொரோனாவுடன் போராடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக இன, மத, அரசியல் வேறுபாடுகளை தாண்டி அனைவரும் அணி திரள வேண்டும் என அரசியல் கைதிகளது குடும்பங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
தமிழ் தலைவர்கள் வெறுமனே கடிதம் எழுதுவதை விடுத்து அரசியல் கைதிகள் விடுதலைக்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரசியல் கைதிகளது விடுதலைக்காக போரிடும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் பிரதிநிதிகள் சகிதம் அரசியல் கைதிகளது குடும்பத்தவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.
இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளனர். அவர்கள் அங்கு கருத்து வெளியிட்ட போது,
“நியூமகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 54 அரசியல் கைதிகளில் 15 பேர் வரையில் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சிறையில் உச்சகட்ட பாதுகாப்பின் மத்தியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளிற்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டதென்பது தெரியவில்லை. திட்டமிட்டு அது பரப்பப்பட்டதாவென்ற சந்தேகமும் எம்மிடமுள்ளது.
குறிப்பாக கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் படையினரது கட்டுப்பாட்டின் கீழுள்ள சிகிச்சை நிலையங்களிற்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அரசியல் கைதியும் பத்து முதல் 25 வருடங்கள் வரையில் சிறை தண்டனையினை அனுபவித்து வருகின்றனர். அவர்களது விடுதலை தொடர்பில் குரல் எழுப்பிய போதும் கண்டுகொள்ளாத அரசு மறுபுறம் 8 ஆயிரம் கைதிகளினை விடுவிப்பதாக கூறி 7 ஆயிரத்து 400 பேரை ஒருவாரத்தினுள் விடுவித்துள்ளது.
ஆனால் அவர்களுள் ஒரு அரசியல் கைதி கூட உள்ளடங்கவில்லை. தீவிர சிங்கள இனவாதியாக அடையாளப்படுத்தப்பட்ட ஞானசார தேரர் கூட அரசியல் கைதிகளது விடுதலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஏனெனில் அவர் சிறையில் அடைக்கப்பட்ட போது அரசியல் கைதிகளது அவல வாழ்வை கண்டமையே அதற்கான காரணமாக இருக்கலாம்.
தற்போதைய நெருக்கடி நிலையில் கொரோனா தொற்று சிகிச்சையின் பின்னராக அரசியல் கைதிகளை பிணையிலோ அல்லது பொருத்தமான அரசியல் தீர்மானமொன்றின் கீழோ விடுவிக்க வேண்டும். அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அவசரமாக ஆராய ஏதுவாக மதத்தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் கட்சி தலைவர்கள் பங்கெடுக்கும் விசேட கூட்டமொன்றை கூட்ட வேண்டும்” எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்