தமிழீழத்தை நேசித்த மூத்த ஊடகவியலாளர் சாவடைந்தார்!

0
282

தமிழின் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (வயது 81) உடல்நலக் குறைவால் நேற்றுக் காலை காலமானார்.

1980களில் கிரிக்கெட் போட்டிகளுக்கான தமிழ் வர்ணனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்துல் ஜப்பார். முதன் முதலாக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தமிழகம்- கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டியை தமிழில் வர்ணனை செய்தார்.

1982-ம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்து- இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டியையும் தமிழில் வர்ணனை செய்தார் அப்போது ஜப்பார். அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், அப்துல் ஜப்பாரை நேரில் அழைத்து பாராட்டினார்.

பின்னர் 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக ஐபிசி தமிழ் வானொலிக்காக பயணியாற்றினார். 2004-ம் ஆண்டு லண்டனில் உலகக் கிரிக்கெட் போட்டிகளை தமிழில் வர்ணனை செய்தார்.

2007-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ESPN – STAR CRICKET தொலைக்காட்சிக்காக, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20:20 உலகக்கோப்பை கிரிக்கெட்டை தமிழில் வர்ணனை செய்தார். மொத்தம் 35 கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளின் வர்ணனையாளராக சிறப்பாகச் செயல்பட்டு உலகத் தமிழரின் நன்மதிப்பைப் பெற்றவர் அப்துல் ஜப்பார்.

அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனையை பெரிதும் நேசித்த தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சமாதான காலத்தில் அப்துல் ஜப்பாரை தமிழீழத்துக்கு அழைத்து விருந்து அளித்து உபசரித்தார். 

‘அழைத்தார் பிரபாகரன்’ எனும் நூலில் தமிழீழ பயணம், தலைவர்  பிரபாகரனுடனான சந்திப்புகளை எழுதியவர் அப்துல் ஜப்பார்.

பன்முகத்தன்மை கொண்ட தமிழ் ஆளுமையான அப்துல் ஜப்பார் நேற்றுக் காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here