முன்னுதாரணமாகத் திகழும் பிரான்சு சோதியா இளையோர் அமைப்பினர்!

0
821

பிரான்சு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியின் (பாரிஸ் 18) இளையோர் அமைப்பினரின் கோவிட் 19 கால உள்ளிருப்பு இணையவழி கற்கை நெறி முன்னெடுப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

பிரான்சில் நடைமுறையில் இருந்த உள்ளிருப்புக் காலப் பகுதியில் சோதியா கலைக் கல்லூரியின் இளையோர் அமைப்பினர் நிர்வாகத்தினரின் வழிகாட்டலுடன் இணையவழியில் தமிழ்மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு மீட்டல் மற்றும் கலைப்பாடங்கள் அனைத்தினதும் இணைய வழிக் கற்பித்தல் செயற்பாட்டை ஆரம்பித்திருந்தனர்.

இதனையடுத்து, மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வகுப்புகளில் கலந்து சிறப்பித்து வருகின்றனர்.

இதற்கு ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாட்டிற்கும் மேலாக, சோதியா இளையோர் அமைப்பினரின் முயற்சியே முன்னுதாரணமாகக் கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு வகுப்பினையும் பொறுப்பெடுத்து, மாணவர்களின் வரவு, ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இணையவழிக் குறைபாடுகள், பெற்றோரின் ஒத்துழைப்புக்கள் எனத் தனித்தனியே கவனித்து அவற்றைப் பட்டியல் இட்டு புள்ளிவிபர அடிப்படையில் அறிக்கையிட்டு பலருக்கும் குறித்த இளையோர் முன்னுதாரணமாக விளங்குகின்றனர்.

இதுதொடர்பாக ஆசிரியர், நிர்வாகிகள், இளையோர் மற்றும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர், துணைப்பொறுப்பாளர் உள்ளிட்டோருடனான கலந்துரையாடல் இன்று (22.12.2020) செவ்வாய்க்கிழமை பிற்பகல் பிரான்சு சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்றவாறு சோதியா கலைக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது சோதியா இளையோர் அமைப்பினரின் இந்த முயற்சியின் வெளிப்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இக்கலந்துரையாடலில் சோதியா இளையோர் அமைப்பினரின் இந்த செயற்பாடு குறித்து அனைவராலும் பாராட்டப்பட்டதுடன், இதனை அனைவரும் பின்பற்றி நடக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதேவேளை குறித்த வகுப்புகளில் இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், சோதியா கலைக்கல்லூரி நிர்வாகத்தினரோடு அல்லது சோதியா இளையோர் அமைப்பினரோடு தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here