கிளிநொச்சி, உருத்திரபுரம் – எள்ளுக்காடு பகுதியில் காணாமற்போன குழந்தையைத் தேடும் பணிகள் நான்காவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றன.
விசேட அதிரடிப் படையினர், கடற்படையினர், பிரதேச மக்களுடன் இணைந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
எள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த 03 வயதான உதயகுமார் யர்சிகா கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் வீட்டிற்கு 2 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சக்திபுரம் குளத்திற்கு தனது ஒன்றுவிட்ட சகோதரனால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
குழந்தையை குளத்திற்கு அருகில் விட்டு, 14 வயதான சகோதரன் குளிக்கச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில், குழந்தை காணாமற்போயுள்ளது.
இதனையடுத்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எள்ளுக்காடு கிராமத்தை இந்தச் சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், கடந்த 03 நாட்களாக பிரதேச மக்கள் பொலிஸாருடன் இணைந்து தேடுதலை முன்னெடுத்துள்ளனர்.
குளத்திற்குள் முதலில் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்போது தேடுதல் நடவடிக்கை பிரதேசம் எங்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், குழந்தை இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கும் பொலிஸார், குழந்தை பணத்திற்காக விற்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் காணாமற்போன குழந்தையின் பெற்றோர், ஒன்றுவிட்ட சகோதரன், பாதிரியார் ஒருவர் உள்ளிட்ட 07 பேரிடம் கிளிநொச்சி பொலிஸார் நேற்று வாக்குமூலம் பதிவுசெய்திருந்தனர்.
அத்துடன், குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.