மாற்றமடைந்த புதிய வைரஸ் தொற்று பிரான்ஸில் உறுதியாகவில்லை: தீவிர ஆய்வுகள் நடப்பதாக அரசு தகவல்!

0
256

மாற்றமடைந்த கொரோனா வைரஸ்(New strain of coronavirus) பிரான்ஸில் இன்னமும் கண்டறியப்படவில்லை என்பதை அரசாங்கப் பேச்சாளர் கப்றியல் அட்டால் (Gabriel Attal) இன்று உறுதிப்படுத்தி உள்ளார்.

பிரிட்டனில் வேகமாகப் பரவியுள்ள மாற்றமடைந்த வைரஸ் நாட்டினுள் தொற்றியுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சுமார் இரு டசின் வைரஸ் கிருமிகள்(viral strains) நிபுணர்களது ஆய்வில் உள்ளன. ஆனால் அவை எதுவும் கொரோனா வைரஸின் மாற்றமடைந்த வடிவத்தைக் கொண்டிருக்கவில்லை – என்ற தகவலை அவர் வெளியிட்டார்.

அதிபர் மக்ரோன் தலைமையில் வீடியோ ஊடாக (videoconference) இன்று காலை நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மாற்றமடைந்த வைரஸின் அச்சுறுத்தல் குறித்தே பிரதானமாக ஆராயப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனிமையில் தங்கியிருந்தவாறு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்குபற்றிய மக்ரோன், புதிய – குழப்பமான – வைரஸ் தொடர்பில் மிக விழிப்புடன் இருக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை – மாற்றமடைந்த வைரஸ் கிருமி பிரான்ஸில் பரவி இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றும் எனினும் அது இன்னமும் நோயாளிகளில் ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சர் Olivier Veran தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இத்தாலியில் புதிய வைரஸ் தொற்றிய தம்பதிகள் இருவர் கண்டறியப்பட்டு ள்ளனர் என்று அந்நாட்டு அரசு இன்று அறிவித்திருக்கிறது. அவர்கள் இருவரும் லண்டனில் இருந்து ரோம் நகருக்குத் திரும்பியவேளை நடத்தப்பட்ட பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது.

மாற்றமடைந்த இந்த வைரஸ் ஏற்கனவே டென்மார்க், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் கட்டு மீறிப் பரவி வருகின்ற புதிய வைரஸ் தங்களது எல்லைகளுக்குள் கடத்தப்படுவதைத் தடுக்கும் அவசரத்தில் உலக நாடுகள் பலவும் லண்டனுடனான சகல போக்குவரத்துகளையும் துண்டித்து வருகின்றன.

குமாரதாஸன். பாரிஸ்.
21-12-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here