இன்னும் சில நாட்களின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்பதனைவிட சில மணித்தியாலங்களில் கலைக்கப்படும் என நான் நம்புகின்றேன்.
எனினும் சரியாக எப்போது கலைக்கப்படும் என்பது ஜனாதிபதிக்கும் கடவுளுக்கும் தான் தெரியும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது. அதன்போது நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் உண்மைத்தன்மை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நானும் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படும் என்று நம்புகின்றேன். இந்த நாடாளுமன்றத்திற்கு புதிய மக்கள் ஆணை தேவையாகவுள்ளது. உண்மையில் ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கிய ஆணையை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய நாடாளுமன்றம் தேவையாகும்.
அதனால் தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என நாம் நம்புகின்றோம். செப்ரெம்பருக்கு முன்னர் புதிய நாடாளுமன்றம் ஒன்று இலங்கையில் இருக்கும் என ஜனாதிபதியே வெளிநாட்டு பிரமுகர்கள் பலரிடம் கூறியிருக்கின்றார்.