மக்ரோன் பணிக்கு வரத் தாமதமானால் அவர் இடத்தை நிரப்பக் கூடியவர் யார்?

0
138

பிரான்ஸின் அதிகார உயர் மட்டத்தை வைரஸ் பீடித்திருக்கிறது. நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார். இந்நிலையில் அவர் நோயின் நிமித்தம் அரச கடமைகளைக் கவனிக்க முடியாமற் போனால் அவரது இடத்தை நிரப்பக்கூடியவர் யார்?

இது தொடர்பாக பிரான்ஸின் அரசமைப்பு என்ன சொல்கிறது?

1958 ஆம் ஆண்டு அரசமைப்பின் படி (அத்தியாயம் 7)ஏதாவது காரணத்தால் அதிபர் பதவி வெற்றிடமாகின்ற சந்தர்ப்பத்தில் உடனடியாக அதனை இட்டு நிரப்பக் கூடியவர் நாடாளுமன்றத்தின் மேலவையாகிய செனட் சபையின் தலைவரே ஆவார்.ஆனால் அந்த இடைக்காலப் பகுதியில் அரசமைப்புக்கு முரணாக நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கோ அன்றி பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கோ அவருக்கு அதிகாரம் இல்லை.

அரசமைப்பின் 12,13 ஆவது ஷரத்துக்கள் இதனைத் தெளிவாக உறுதி செய்கின்றன. அதன்படி மக்ரோன் தனது பணிகளுக்குத் திரும்ப நீண்ட காலதாமதமாகும் பட்சத்தில் தற்போதைய செனட்டின் தலைவரான (President of the Senate) றிப்பப்ளிக்கன் கட்சியைச் சேர்ந்த ஜெராட் லார்சே (Gérard Larcher) அவர்களே மக்ரோனின் கடமைகளைக் கவனிப்பார்.

இவ்வாறான இரண்டு சந்தர்ப்பங்கள் அண்மைய வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. 1969 இல் அதிபர் ஜெனரல் து ஹோல் (General de Gaulle) பதவி விலகிய சமயத்திலும்,1974 இல் அதிபர் ஜோர்ஜ் பொம்பிடு (Georges Pompidou) உயிரிழந்த சந்தர்ப்பத்திலும் இரண்டு தடவைகள் அன்றைய செனட்டின் தலைவர் அதிபரின் கடமைகளை ஏற்றுக்கொள்ள நேர்ந்திருக்கிறது.

ஆனால் அவ்வாறு ஜனாதிபதியின் இடைக்காலக் கடமைப் பொறுப்பை செனட் சபையின் தலைவர் பொறுப்பேற்க முடியாமற் போகின்ற பட்சத்தில் என்ன நடைமுறை பின்பற்றப்படலாம்?

அதனை அரசமைப்பு தெளிவாக வரைந்து கூறவில்லை.

ஆனால் அதன் பிறகே ஜனாதிபதியின் பதவிப் பொறுப்புகள் அரச நெறிமுறை, கௌரவம், பதவித் தர வரிசை என்ற அடிப்படையில் நாட்டின் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திடம் வருகின்றது.

அதன்படி தற்போதைய அரசாங்கத்தில் பிரதமர் Jean Castex, வெளிவிவகார அமைச்சர் Jean-Yves Le Drian, சுற்றுச் சூழல் அமைச்சர் Barbara Pompili,தேசிய கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer, பொருளாதார அமைச்சர் Bruno Le Maire ஆகிய முதல் ஐந்து முக்கியஸ்தர்களில் எவராவது ஒருவர் ஜனாதிபதியின் கடமைகளைக் கவனிக்கலாம்.

அதிபர் நிரந்தரமாகப் பணிக்குத் திரும்ப முடியாது போகும் பட்சத்தில் அந்த தீர்மானம் அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து குறைந்தது 20 நாட்கள் முதல் கூடியது 35 நாட்களுக்குள் புதிய தேர்தல் ஏற்பாடு செய்யப்படவேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் சுட்டிக்காட்டுகின்றது.

குமாரதாஸன். பாரிஸ்
19-12-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here