மைத்திரிபால சிறிசேன தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து உரையாடினார். நேற்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து கொண்டார். கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், பொன் செல்வராசா, செல்வம் அடைக் கலநாதன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்ற இச்சந்திப்பில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு எடுக்கவேண்டிய முயற்சிகள் குறித்துப் பேசப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடையக் கூடியதும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அரசியல் தீர்வை அடை வதற்கான பொறிமுறைகளும் மற்றைய தேவைகளுக்கான நடவடிக்கைகளும் சம்பந்தமாக உரையாடப்பட்டது.
வடக்கு கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான சில பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது. அதிலே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் தொடர்பாக எடுக்க வெண்டிய உடனடி நடவடிக்கைகள், பழைய போராளிகள் நாட்டிற்கு திரும்பும் போது கைது செய்யப்படுகின்றமை, பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்பவற்றோடு விடுவிக்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாத காணி தொடர்பான விடயங்களும் பேசப்பட்டன.
இவை சம்பந்தமாக துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்போடு இவ்வுரையாடல்களை நடாத்துவதாகவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.