சுவிஸ் சமஷ்டி அரசு நாடு முழுவதும் உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் கலாச்சார நிலையங்கள், விளையாட்டு மையங்களை ஒருமாத காலப்பகுதிக்கு மூடுமாறு உத்தரவிட்டிருக்கிறது.
தேவையற்ற நடமாட்டங்கள், சந்திப்புக்களைத் தவிர்த்துக் கொண்டு வீடுகளில் தங்கியிருக்குமாறு நாட்டு மக்களை அரசு கேட்டிருக்கிறது.
கடுமையான இந்தக் கட்டுப்பாடுகள் வரும் செவ்வாய்க்கிழமை முதல்(டிசெ. 22)அமுலுக்கு வரும் என்று சுகாதார அமைச்சர் அலெய்ன் பெர்செற் (Alain Berset) அறிவித்திருக்கிறார்.
தொற்றாளர்களைச் சமாளிப்பதில் நாட்டின் மருத்துவ சுகாதார வசதிகள் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாத நிலைமை உருவாகி வருவதால் இந்தக் கட்டுப்பாடுகள் அவசியம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
நாடளாவிய இந்தக் கட்டுப்பாடுகளை பிராந்தியங்கள் (கன்ரன்கள்) தத்தமது தொற்று நிலைவரத்தைப் பொறுத்து தளர்த்திக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
ஸ்கீ (ski) என்கின்ற பனிச் சறுக்கல் விளையாட்டுத் திடல்களை மூடுகின்ற முடிவை அரசு அந்தந்த கன்ரன்களின் பொறுப்பில் விட்டிருக்கிறது.
வைரஸின் இரண்டாவது அலைத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முழுவதையும் முடக்குமாறு சுவிஸின் முக்கிய மருத்துவமனை நிர்வாகங்களும் சுகாதார அறிவியலாளர்களும் விடுத்துவந்த அவசர கோரிக்கைகளை அடுத்தே அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.
ஜேர்மனி,ஒஸ்ரியா போன்ற சுவிஸின் அண்டை நாடுகள் நத்தார் மற்றும் புதுவருட காலப்பகுதியை ஒட்டி பல இறுக்கமான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உள்ளன.
சுவிஸில் வெள்ளிக்கிழமை மட்டும் 4ஆயிரத்து 478 புதிய தொற்றுக்களும் 120 உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளன.
(படம் :சுவிஸ் சுகாதார அமைச்சர் அலெய்ன் பெர்செற் (Alain Berset))
குமாரதாஸன். பாரிஸ்.
18-12-2020