பொதுச்சந்தை பூட்டுவது தொடர்பாக மாறி மாறி கிடைத்த அறிவிப்புக்களில், கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் அசௌகரியங்களை இன்று (18) எதிர்கொண்டனர்.
வட மாகாணத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் பூட்டப்படும் எனும் அறிவித்தல் வெளியான நிலையில் இன்று கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் இடையில் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை மரக்கறி மற்றும் மீன் சந்தைகளை பூட்டுமாறும், ஏனைய வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று இயங்கும் எனவும் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஏனைய வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். சில மணிநேரங்களின் பின்னர் அனைத்து வர்த்தக நிலையங்களையும் பூட்டுமாறு கரைச்சி பிரதேச சபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாறி மாறி கிடைத்த அறிவித்தல்களால், பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்ட சந்தை வர்த்தகர்கள் முழுமையாக வர்த்தக செயற்பாடுகளிலிருந்து வெளியேறினர்.
ஆயினும் மரக்கறி, மீன் உள்ளிட்டவை வீதியோரங்களில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சந்தையின் உட்பகுதியில் உள்ள பல்பொருள் வாணிபம், ஆடை விற்பனை நிலையம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.