பிரான்ஸ் அதிபர் மக்ரோன் எலிஸே மாளிகையில் இருந்து வெளியேறி வேர்சாய் (Versailles) நகரில் உள்ள வாசஸ்தலத்துக்குச் சென்று அங்கு தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
பிரெஞ்சு ஜனாதிபதியின் இரண்டாவது உத்தியோக பூர்வ வாசஸ்தலம் புகழ்பெற்ற வேர்சாய் (Versailles) நகரில் அமைந்துள்ளது.
“லா லன்ரேன்” (La Lanterne) என்று அழைக்கப்படுகின்ற அங்குள்ள தோட்ட அரண்மனையில் அதிபர் தம்பதிகள் தங்கள் வார இறுதி நாட்களைக் கழிப்பது வழக்கம்.
வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்டதை அடுத்து அதிபர் மக்ரோன் நேற்று எலிஸே மாளிகையை விட்டு தனியே வெளியேறி “லா லன்ரேன்” வாசஸ்தலத்துக்குச் சென்று தங்கியுள்ளார். எனினும் துணைவியார் பிறிஜித் மக்ரோன் தொடர்ந்தும் எலிஸே மாளிகையிலேயே உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் மக்ரோனுக்கு இருமல், லேசான காய்ச்சல், மிகுந்த களைப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக எலிஸே மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள் ளன.
கடந்த திங்களன்று எலிஸே மாளிகையில் ஸ்பெயின் பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்குபற்றிய விருந்துபசாரத்தின்போது அதிபர் மக்ரோன் பிரமுகர் ஒருவருக்கு கைலாகு கொடுக்கும் காட்சி ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
மக்ரோன் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியமைக்கு இத்தகைய சமூக இடைவெளியை மீறிய சந்தர்ப்பங்கள் காரணமாக இருந்திருக்கலாம் என்பதை எலிஸே மாளிகை வட்டாரங்கள் ஒத்துக் கொண்டுள்ளன.
குமாரதாஸன். 18-12-2020
பாரிஸ்.