அதிபர் மக்ரோன் கடைசியாகக் கலந்து கொண்ட உயர் மட்ட மாநாடுகளில் அவரைச் சந்தித்த தலைவர்கள் பலரும் முன்னெச்சரிக்கையாக தங்களது நடமாட்டங்களைக் குறைத்துக்கொண்டு சுயதனிமையைப் பேணிவருகின்றனர்.
ஸ்பெயின் பிரதமர் Pedro Sánchez, போர்த்துக்கல் பிரதமர் António Costa, பெல்ஜியத்தின் பிரதமர் Alexander De Croo
லக்ஸம்பேர்க் பிரதமர் Xavier Bettel ஆகியோர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர் . இவர்கள் அனைவருக்கும் வைரஸ் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜரிஷ் பிரதமர் Micheál Martin தனது நடமாட்டங்களைக் குறைத்துக் கொண்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்கலுக்கும் தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் பிரசெல்ஸில் மக்ரோனுடன் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் இரு தினங்கள் பங்கு பற்றிய அதன் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கூட தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
பிரசெல்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட சமயத்திலேயே மக்ரோன் தொற்றுக்கு இலக்காகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மக்ரோனின் துணைவியார் பிறிஜித் மக்ரோன் (வயது 67) பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு தொற்று கண்டறியப்படவில்லை. அவர் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தொற்றுப் பரிசோதனையின் பின்னர் பிரதமர் Jean Castex, சபாநாயகர் Richard Ferrand ஆகிய இருவரும் ஏழு நாள்கள் சுயதனிமையில் உள்ளனர்.
எலிஸே மாளிகையில் கடைசியாக இடம்பெற்ற மதியபோசனத்தில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள் அனைவரும் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
மக்ரோன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை – ஏழு நாட்கள் – தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்புடன் தனிமையில் தங்கியிருப்பார். லெபனானுக்கு மேற்கொள்ளவிருந்த விஜயம் உட்பட அவரது உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகள் யாவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
தற்சமயம் மக்ரோன் லேசான தொற்று அறிகுறிகளுடன் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அவரது உறவினர்கள் கூறியிருக்கின்றனர். தொற்று அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் இணைய வழி வீடியோ மாநாடு (videoconference) ஒன்றில் கலந்துகொண்ட காட்சிகள் இன்று மாலை வெளியாகி உள்ளன.
தனக்கு தொற்று ஏற்பட்ட தகவலை அவர் தனது TousAntiCovid மொபைல் செயலி மூலம் தெரியப்படுத்தி உள்ளார்.
ஒருவேளை அவரது உடல் நிலை பாதிக்கப்படுமிடத்து முதலில் எலிஸே மாளிகையின் உள்ளக சுகாதார சிகிச்சைப் பிரிவின் மருத்துவ நிபுணர்கள் அவரைக் கண்காணித்து சிகிச்சை அளிப்பார்கள் என்றும் பின்னர் அவர் விசேட பிரமுகர்களுக்கான இராணுவ சிகிச்சைப் பிரிவினரது கட்டுப்பாட்டின் கீழ் ஓர் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் எனவும் எலிஸே வட்டாரங்களை ஆதாரம் காட்டி பாரிஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
படம் :பிரசெல்ஸில் வெள்ளியன்று நடந்த மாநாட்டில் மக்ரோனுடன் அங்கெலா மெர்கல் மற்றும் ஐரோப்பியக் கவுன்சிலின் தலைவர் சார்ள்ஸ் மிஷெல் (Charles Michel).
குமாரதாஸன். பாரிஸ்
18-12-2020