பணியில் அளவுக்கு அதிக பெண்கள்: பாரிஸ் நகரசபைக்கு அரசு அபராதம்!

0
207

நிர்வாக முகாமைத்துவப் பதவிகளில் ஒதுக்கப்பட்ட அளவுக்கு அதிக எண்ணிக்கையில் பெண்களை நியமித்த காரணத்தால் பாரிஸ் நகரசபை நிர்வாகம் குற்றப் பணம் செலுத்த நேர்ந்துள்ளது.

பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ இத்தகவலை வெளியிட்டிருக்கிறார்.
இந்தச் செய்தியை மிக்க மகிழ்ச்சியுடன் வெளியிடுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

2018 ஆம் ஆண்டில் நகர நிர்வாகத்தின் உயர் முகாமைத்துவப் பதவிகளில் 11 பெண்களை நியமித்திருந்த நகரசபை, அதே ஆண்டில் ஆக ஐந்து ஆண்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்கி இருந்தது. இதனால் நியமனங்களில் பால் சமத்துவம் தொடர்பான விகிதங்கள் மீறப்பட்டுள்ளன எனத் தெரிவித்து சிவில் நிர்வாக சேவை அமைச்சு நகரசபைக்கு 90 ஆயிரம் ஈரோக்களை அபராதமாக விதித்துள்ளது.

ஆண் அல்லது பெண் ஒருபால் இனத்தவர்களில் 60 வீதமானவர்கள் மட்டுமே முகாமைத்துவப் பதவிகளில் நியமிக்கப்படவேண்டும் என்று பிரெஞ்சு சட்ட விதிகள் கூறுகின்றன. பாரிஸ் நகரசபை 69 வீதமான இடங்களைப் பெண்களுக்கு வழங்கி இருந்தது.

அபராதம் விதிக்கப்பட்டமையைப் பெருமையாகக் கருதுவதாகக் கூறியிருக்கும் மேயர் ஆன் கிடல்கோ, உயர் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதே தனது இலக்கு என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஜூனில் நகர சபைத் தேர்தலில் இரண்டாவது தடவையாகவும் வெற்றி பெற்று பாரிஸ் நகரின் மேயராக மீண்டும் தெரிவாகியுள்ள கிடல்கோ, சோசலிஸக் கட்சியில் பெரும் செல்வாக்கு மிக்கவராக மாறியுள்ளார். 2022 இல் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் மக்ரோனை எதிர்க்கும் ஒரு முக்கிய வேட்பாளராக கிடல்கோவும் களமிறங்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

குமாரதாஸன். பாரிஸ்
16-12-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here