ஆந்திராவில் மர்ம நோய்ப் பாதிப்புக்கு பற்றரிகள் மீள் சுழற்சி காரணமா?

0
159

ஆந்திராவில் சுமார் 600 க்கும் அதிகமானவர்களைப் பாதித்த புதிய நோய்க்கு பற்றரிகளை மீள் சுழற்சி செய்வதன் விளைவாகப் பரவும் நிக்கல்(nickel)மற்றும் ஈயத்துகள் மாசு காரணமா?

இந்தியாவின் பிரபல “எய்ம்ஸ்” மருத்துவமனை நிபுணர்கள் இவ்வாறு சந்தேகிக்கின்றனர்.

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தின் ஏழூரு நகரில் திடீரென வலிப்பு, வாந்தி, வாயில் நுரை வெளியேறுதல் போன்ற பாதிப்புகளுடன் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

டிசெம்பர் 6 ஆம் திகதி முதல் இதுவரை சுமார் அறுநூறு பேரைப் பாதித்திருக்கும் அந்த மர்ம நோய் குறித்து மாநில அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நோய்ப் பாதித்தவர்களில் எவரிலும் கொரோனா வைரஸ் தொற்று காணப்படவில்லை. இதனால் என்னவென்று அறியாத இந்தப் புதிய நோய் குறித்து பல கோணங்களில் ஆய்வுகள் நடைபெறுகின்றன.

புதுடில்லி “எய்ம்ஸ்” மருத்துவர்கள் தங்களது முதற்கட்ட சோதனைகளில் நோய்வாய்ப்பட்ட பத்துப் பேரது இரத்த மாதிரிகளில் ஈயம் மற்றும் நிக்கல் மாசு குறைந்த அளவில் கலந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர் எனத் தெரிவிக்கப் படுகிறது.

உணவு, தண்ணீர் ஊடாக ஈயம், நிக்கல் போன்ற மாசுகள் உடலில் பரவியதால் பலரும் நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பற்றரிகளை மறு சுழற்சி (recycling of batteries)செய்யும் செயல்முறை, அல்லது உடைந்த பற்றரிகளை கண்டபடி மண்ணில் புதைப்பது, தீவைத்து எரிப்பதன் காரணமாக மண்ணையும் காற்றையும் அது மாசுபடுத்தி யிருக்கலாம் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ள “எய்ம்ஸ்” மருத்துவர்கள், குடி தண்ணீர் ஊடாக நிக்கல் துகள்கள் உடலில் கலப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கலாம் என்று நம்புகின்றனர்.

உலகெங்கும் பற்றரி வகைகளின் (மின்கலங்கள்) தேவை பல மடங்கில் உயர்ந்து செல்வதால் அவற்றை மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலைகள் பெருகிவருகின்றன.

வாகன பற்றரிகள் உட்பட சகல விதமான மின் கலங்களையும் மறு சுழற்சி செய்யும் தொழிற்றுறைகள் ஆந்திரா உட்பட இந்திய மாநிலங்கள் பலவற்றில் பெரும் வருவாய் ஈட்டும் தொழில்களாக மாறியுள்ளன.

பற்றரி கழிவுகள் பற்றிய ஆய்வுகள் ஒருபுறம் இருக்க, குளோரின், பிளீச்சிங் தூள் போன்ற சுத்திகரிப்புத் தொற்றுநீக்கிகளின் அபரிமிதமான பாவனை காரணமாக அவை நீர் நிலைகளில் கலந்து இந்தப் புதிய நோய்ப் பாதிப்பை மனிதர்களில் உருவாக்கியிருக்கலாம் என்றும் ஆந்திரா மாநில அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தற்சமயம் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் பொதுவாக குளோரின் போன்ற தொற்று நீக்கி இரசாயனப் பொருள்கள் அளவுக்கு அதிகமாகப் பயன்பாட்டில் இருப்பதையும் அவர்கள் கவனத்தில் எடுத்துள்ளனர்.

விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பீடை நாசினிகள் (pesticides) மரக்கறிகள் மூலம் உடலில் பரவி இந்தப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்றும் மாநில சுகாதாரத் துறையின் மூத்த மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தண்ணீர், மரக்கறி, மீன், அரிசி, பழங்கள் மற்றும் இரத்த மாதிரிகள் போன்றன அங்கு பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆந்திராவில் மரக்கறி, பழங்களின் விற்பனை பெரிதும் வீழ்ச்சிகண்டுள்ளது.

சீனாவில் வுஹானில் இருந்து பரவியதாகச் சந்தேகிக்கப்படும் கொரோனா வைரஸின் கோரப் பிடிக்குள் முழு உலகமும் இன்னமும் சிக்கித் தவிக்கும் நிலையில் இந்தியாவில் பரவிய இந்தப் புதிய மர்ம நோய் பற்றிய செய்திகள் கடந்த வாரம் எல்லா நாடுகளிலும் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

குமாரதாஸன். பாரிஸ்
14-12-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here