காரணமின்றி இரவு 7.30 மணிக்குப் பின்னர் ஒன்றுகூடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என யாழ்.தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எவ்.யூ. வுட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பாடசாலை நேரங்களில் மாணவர்கள் வீதிகளில் பொது இடங்களில் அனுமதியின்றி நடமாடினால் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.குடாநாட்டில் அண்மைக் காலமாக போதைப்பொருள், மதுபாவனை, சட்டவிரோதமான முறையில் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அச்சமடையும் நிலையொன்று காணப்பட்டது.
எனினும் நாம் குடாநாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அமைதியான நிலைமையைத் தொடர்ந்தும் பேணுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
குறிப்பாக பாடசாலை வளாகங்களை கண்காணித்தல், விசேட ரோந்து நடவடிக்கைகள் என்பன முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் இரவு 7.30 மணிக்குப்பின்னர் காரணமின்றி ஒன்று கூடுபவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.
அதேநேரம் பெற்றோர்கள் மாணவர்களின் நடத்தைகளை அவதானிக்க வேண்டிய பொறுப்புடையவர்களாக இருக்கின்றனர்.
இதேவேளை யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்தின்போது கருத்து வெளியிட்டவர் யாழ். நகர்ப் பகுதிகளில் இரவு வேளைகளில் மது அருந்துபவர்கள், போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
அத்துடன் பாடசாலை நேரங்களில் மாணவர்கள் அனுமதியின்றி வீதிகளிலோ பொது இடங்களிலோ காணப்பட்டால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.
மாணவர்கள் ஒழுக்க சீலர்களாக கல்வி நடவடிக்கை களில் கவனம் செலுத்தி சிறந்தவர்களாக வரவேண்டும். மாணவ பருவத்தில் சிறை செல்லும் வாழ்க்கை துக்ககரமானதாகும் என்றார்.