விடுவிக்கப்பட்டது யாழ்.உடுவில் பிரதேச முடக்கம்!

0
252

யாழ். உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டு அந்தப் பிரதேசம் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் நேற்றிரவு 10.30 மணிக்கு அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிமாக மூடப்பட்டிருக்கும்.

யாழ். மாவட்டத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் அவர்களது குடும்பத்தையும் அவர்களுடன் தொடர்புடையோரையும் வீடுகளில் சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் முன்னெடுப்பார்கள்.

உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மருத்துவ – சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் நேற்று முன்தினம் இரவு முதல் முடக்கப்பட்டன.

குறித்த செயலகப் பிரிவில் 30 கிராம அலுவலர் பிரிவுகளில் 28 பிரிவுகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் உடுவில் பிரதேச செயலகப் பிரிவை விட தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் அதிக தொற்றாளர்கள் உள்ளமை கண்டறியப்பட்டது.

இதனால் உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் நேற்றிரவு முதல் நீக்கப்பட்டு முடக்க நிலை விடுவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என 398 குடும்பங்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்படுகின்றனர். சுயதனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் எந்தவொரு காரணத்துக்காகவும் வீட்டை விட்டு வெளியேற முடியாது.

யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்கள் பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளமையால் வீட்டுத் தனிமைப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனாலேயே எந்தவொரு பிரதேசமும் முடக்கப்படவில்லை.

சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here