அண்ணன் ஆண்டன் பாலசிங்கம் அவர்களை நான் சந்தித்ததில்லை. 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழீழத்தில் என்னுடைய ”புயலின் நிறங்கள்” ஈழப் போராட்ட வரலாறு- ஓவியக் காட்சி நடைபெற்ற போது என் ஓவியங்கள் மற்றும் அதற்கான கவி வரிகளை வைத்து ஒரு பெண் போராளியால் தயாரிக்கப்பட்டு தமிழீழத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப் படத்தை அண்ணன் பாலா அவர்களுக்கும் அண்ணி அடேல் அவர்களுக்கும் அவர்கள் தமிழீழம் வந்த போது போட்டுக் காட்டியதாகவும், இருவருக்கும் ஓவியங்கள் மிகவும் பிடித்து விட்டதாகவும், குறிப்பாக அடேல் மிகவும் பாராட்டியதாகவும், அதை என்னிடம் கூறசொன்னதாகவும் புலித்தேவன் அவர்கள், நான் மீண்டும் தமிழீழம் சென்ற போது தெரிவித்தார். நான் மிகவும் மகிழ்ந்தேன்.
அன்று மாலை என்னைச் சந்தித்த “அறிவமுது” புத்தகச் சாலையின் பொறுப்பாளர் இளங்கோவன் (ரமேஷ்) அவர்கள், “பாலா அண்ணா எழுதிய ‘விடுதலை’ நூலில் விடுதலைப் போராட்டம் குறித்தக் கட்டுரைகளும் தத்துவஞானிகள் குறித்தக் கட்டுரைகளும் தொகுக்கப் பட்டிருக்கிறது அதைப் பிரித்து விடுதலைப் போராட்டம் குறித்தக் கட்டுரைகளைத் தனியாகவும் தத்துவஞானிகள் குறித்தக் கட்டுரைகளைத் தனியாகவும் வெளியிட அவர் சொல்லியிருக்கிறார். அதற்கான அட்டை வடிவமைப்பை உங்களைச் செய்ய சொல்லியிருக்கிறார்.” என்றார். நான் 2002 ஆம் ஆண்டு அமெரிக்க, கனடா, ஐரோப்பியப் பயணத்தின் போது, கனடாவில் அந் நூலை எனக்குத் தந்தார்கள். பலமுறை அந் நூலைப் படித்துவிட்டேன், எம்.ஜி.ஆர் செய்த உதவிகள் குறித்தும், தலைவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே உள்ள நெருக்கம் குறித்தும் அதில் எழுதியிருக்கிறார். என்றேன்.
இரண்டு நூலுக்கும் நான் முகப்பு வடிவமைப்பு செய்வதற்கு முன்பு ஒருநாள் ரமேஷ், “பாலா அண்ணா கதைத்தார். நீங்கள் இங்கு நிற்கும் செய்தியை அவரிடம் சொன்னேன். உங்களுடன் கதைக்க வேண்டும் என்றார். நாளை கதைக்கலாமா” என்றுக் கேட்டார். மறுநாள் மாலைப் பொழுதில் சில நிமிடங்கள் அவரோடுக் கதைத்தேன். பலநாள் பழகியதுபோல் இருந்தது அவருடைய பேச்சு. மறக்க இயலாத நிமிடங்கள் அவை….அட்டையை என் விருப்பதிற்கே செய்யலாம் என்றார். அவ்வாறே செய்து கொடுத்துவிட்டும் வந்தேன்.
ஓவியர் புகழேந்தி.