தமிழர் தாயகத்தில் அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை!

0
214

முல்லைத்தீவு  கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் எடுக்கவேண்டும் என முல்லைத்தீவு மீனவர்கள் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால் அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை பாரிய போராட்டத்தில் ஈடுபடுவதுடன், இந்திய மீனவர்களை முல்லைத்தீவுக் கடற்பரப்பிலிருந்து தாமே துரத்தியடிப்போம் எனவும் எச்சரித்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரிக்கும் நிலையில், அதனைத் தடுப்பதற்காக முல்லைத்தீவு மீனவர்கள் 25 படகுகளுக்கு மேல் கடலுக்குச் செல்லத் தயாராகியிருந்தனர்.

இவர்களுடன் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை ஆகியோரும் இணைந்திருந்தனர்.

இதனையறிந்த முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ்.கலிஸ்ரன், நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் கடற்கரைப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

அரச அதிகாரிகள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் மீனவர்களுடன் நீண்டநேரம் கலந்துரையாடினர். இதன்போது, திங்கட்கிழமைக்குள் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவர்கள் சார்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அவ்வாறு  இப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தரத் தவறினால், மறுநாள் செவ்வாய்க்கிழமை  பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதுடன், போராட்டத்தினைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் சென்று இந்திய மீனவர்களை முல்லைத்தீவுக் கடற்பரப்பிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக மேலதிக அரச அதிபர் கூறுகையில், இது இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் உள்ள பிரச்சினை. எனவே இப்பிரச்சினைக்கு இராஜதந்திர வழியிலேயே தீர்வினைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மாறாக இரு நாட்டு மீனவர்களும் நேரடியாக மோதிக்கொள்வது மேலும் பிரச்சினைகளை உருவாக்குவதாக அமையும்.

ஆகவே இப்பிரச்சினை தொடர்பில் மாவட்ட செயலர் க.விமலநாதன் ஊடாக வடமாகாண ஆளுநர், கடற்றொழில் அமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்குத் தெரியப்படுத்தி உரிய தீர்வினைப் பெற்றுத்தருகின்றோம் என்றார்.

அதனைத் தொடர்ந்து மீனவர்கள் கடற்கரையிலிருந்து விலகிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,

வடமராட்சிக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எத்தனை உயிரிழப்பு நிகழ்ந்தாலும் பின்வாங்கப்போவதில்லை என்றும் வடமராட்சி வடக்கின் 13 மீனவச் சங்கங்கள் கூட்டாகத் தீர்மானித்துள்ளன.

இது குறித்த கலந்துரையாடல் இன்று (13) மதியம சக்கோட்டையில் நடைபெற்றது. சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு வடமராட்சி வடக்கு மீனவ சங்கங்களின் சமாசத் தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,

“அண்மைக் காலமாக இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் நடவடிக்கைகள் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. எமது மீன்வளம் முழுமையாக அபகரிக்கப்படுகின்றது. எமது மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையை கைவிட்டு கூலிவேலைக்கு செல்ல வேண்டிய அபாய நிலைகூட காணப்படுகின்றது.

குறித்த அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய, இலங்கையின் அனைத்துத் தரப்பினருக்கும் கடிதங்கள் மூலமும் நேரடியாகவும் கோரிக்கை விடுத்தோம். இருந்தபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே இன்று ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இழுவைப்படகில் வருபவர்களைத் தாக்குவோம். அதன் போது ஏற்படும் மோதலில் எத்தனை உயிரிழப்புக்கள் நிகழ்ந்தாலும் அஞ்சப்போவதில்லை.

அவ்வாறு ஏற்படப்போகும் இழப்புக்களுக்கு இரண்டு நாட்டு அரசாங்கங்களும் தான் பொறுப்பேற்க வேண்டும். இன்று தொடக்கம் இழுவைப்படகுகளைக் கண்டால் உடனடியாகச் சென்று அடித்து தாழ்ப்போம் என்று தீர்மானிக்கப்பட்டதாக” குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here