கிளிநொச்சி, உருத்திரபுரம், எலுக்காடு பிரதேசத்தில் மூன்று வயது சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளார். இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில் அச்சிறுமி கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் சிக்கலில் மட்டிக்கொண்டுள்ளாரா? என்பது குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
உதயகுமார் யர்சிகா எனும் மூன்று வயதுடைய சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் இது தொடர்பில் நேற்று மாலை வரை 6 இற்கும் மேற்பட்ட வாக்கு மூலங்களை பொலிஸார் பதிவு செய்துள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய முன்னுக்கு பின் முரணான பல கதைகள் பொலிஸாருக்கு வாக்கு மூலங்கள் ஊடாக கூறப்பட்டுள்ளதால் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர மேலும் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த 21 ஆம் திகதியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு இரவு வேளையிலேயே தகவல் கிடைத்துள்ளது.
குறித்த சிறுமியின் தாயுடன் அவர் இருந்த போது அவரின் உறவினர்கள் எனக் கூறப்படும் இரு இளைஞர்கள் அந்த இடத்துக்கு வந்துள்ளதுடன் சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு அருகில் உள்ள குளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தாய் குளிப்பதற்காக குளத்துக்கு செல்ல தயாராக இருந்ததைத் தொடர்ந்தே அவர்கள் இவ்வாறு அழைத்துச் சென்றுள்ளனர்.
குளத்துக்கு சென்ற இவர்கள் சிறுமியை குளக்கட்டில் இருத்திவிட்டு நீராடியுள்ளனர். இதன்போது அவ்விடத்துக்கு வந்த சிறுமியின் தாய் சிறுமி எங்கே என வினவிய போது அவள் குளக்கட்டில் இருப்பதாக அவர்கள் பதிலளித்த போதும் அச்சிறுமி அங்கிருக்கவில்லை என பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை நடத்தி வரும் நிலையில், குறித்த சிறுமியை பிறிதொரு இடத்தில் கண்டதாக நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். முன்னுக்கு பின் முரணாக இவ்வாறு பல கதைகள் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே சிறுமிக்கு என்ன நடந்தது என ஊகிக்க முடியாத நிலை உள்ளது.
நேற்று மாலை வரை கடற்படையினரின் உதவியுடன் குறித்த குளத்தில் தேடுதல் நடத்தப்பட்டது. குளக்கட்டில் இருந்த போது சிறுமி குளத்தினுள் விழுந்தாரா என தேடுதல் நடத்தவே இவ்வாறு கடற்படையின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டது.
பிரதேசவாசிகளின் உதவியுடனும் பல பகுதிகளிலும் தேடுதல்கள் தொடர்கின்றன. சிறுமி கடத்தப்பட்டாரா, அல்லது குளத்தில் விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் சிக்கல்களுக்குள் சிக்குண்டுள்ளாரா என பல்வேறு கோணங்களில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன என்றார்.
எவ்வாறாயினும் நேற்று மாலை வரை குறித்த சிறுமி தொடர்பில் எவ்வித தக வல்களையும் பொலிஸார் கண்டுபிடித்தி ருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.