ஜேர்மனியில் கடைகள், பள்ளிகள் மூடல் புதிய கட்டுப்பாடுகள் புதன் முதல் அமுல்!

0
333

ஜேர்மனியில் நாடு முழுவதும் புதிய கடுமையான சுகாதாரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் புதன்கிழமை தொடக்கம் அமுலுக்கு வருகின்றன.

மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள், சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், முன் பள்ளிகள், குழந்தைகள் காப்பகங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன. கல்வி மற்றும் தொழில் நடவடிக்கைகளை வீடுகளில் இருந்து முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டிருக்கிறது.

நத்தார் பள்ளி விடுமுறைக் காலம் ஜனவரி பத்தாம் திகதிவரை நீடிக்கப்பட் டிருக்கிறது.

பட்டாசு விற்பனை, பொது இடங்களில் மது அருந்துவது ஆகியன தடைசெய்யப்பட்டுள்ளன.

அதிபர் அங்கெலா மெர்கல் நாட்டின் 16 மாநிலங்களினதும்(Länder) தலைவர்களோடு நடத்திய அவசர ஆலோசனைகளுக்குப் பிறகு இறுக்கமான இந்தக் கட்டுப்பாடுகளை இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருக்கின்றார்.

நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவருவதை அடுத்தே நத்தார் மற்றும் புதுவருட காலப்பகுதியில் பொது முடக்கம் ஒன்றை அமுலாக்கவேண்டிய நிலைமை அங்கு உருவாகி இருக்கிறது. அங்கு நாளாந்த தொற்று எண்ணிக்கை 30 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது.

பண்டிகைக் காலத்தில் கடைகளை மூடும் அறிவிப்பு வர்த்தக உலகை பெரிதும் பாதித்திருக்கிறது.

டிசெம்பர் 24, 25 இரு தினங்களும் நத்தார் குடும்ப ஒன்று கூடல்களில் இரண்டு குடும்பங்களின் உறுப்பினர்கள் மட்டும்- ஐந்துக்கு மேற்படாத வளர்ந்தவர்கள் என்ற எண்ணிக்கையில்- கலந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப் படுகிறது.

ஏற்கனவே சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி செயற்பட்டு வரும் சிகை அலங்கரிப்பு நிலையங்களையும் மூடி விடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

(படம் : Deutsche Welle தொலைக்காட்சி Screen Shot)

குமாரதாஸன். பாரிஸ்
13-12-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here