செயற்கை உடல்வலு, நுண்ணறிவு மூலம் படைகளைப் பலப்படுத்த பச்சைக்கொடி!

0
233

மரபுப் போர் முறை வடிவங்கள் அடியோடு மாற்றம் பெறவுள்ளன.மனிதனிடம் இயற்கையாக உள்ள உடல், உள நுண்ணறிவு வலுக்கள்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பது இனிமேல் காலங்கடந்த பழைய தத்துவம் ஆகிவிடப்போகிறது.

இயற்கைக்குப் புறம்பாக உருவாக்கப்படும் “பயோனிக்” வீரர்களும் (bionic soldiers) செயற்கை நுண்ணறிவூட்டப்பட்ட(artificial intelligence) துப்பாக்கிகளும் மோதுகின்ற அரங்குகளாகப் போர்க்களங்கள் மாறப்போகின்றன.

எதையும் நிச்சயித்துக் கூறமுடியாத தொற்றுநோய்ப் பேரனர்த்தம் உலகைச் சூழ்ந்துள்ள நிலைமையிலும் கூட படைவலுப் பெருக்கங்களும் பரீட்சார்த்த சோதனைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

பிரான்ஸின் ஆயுதப் படைகளில் செயற்கையாக உடல்வலு, நுண்ணறிவு ஊடப்பட்ட வீரர்களை உருவாக்குவதற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டிருக்கிறது.

எதிர்காலப் போர்க் களங்களை எதிர்கொள்ளத் தக்க வகையில் “மேம்படுத்தப்பட்ட சிப்பாய்களை”
(enhanced soldiers) உருவாக்குவதற்கான உயிரியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சிகளைத் தொடங்குவதற்கு ஆயுதப்படைகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

நவீன இராணுவ உத்திகளை வகுப்பதற்காக அரசினால் அமைக்கப்பட்ட நெறிமுறை வல்லுநர் குழு(ethical experts) ஒன்று இந்த வாரம் வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கையில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன.

படைவீரர்களது உடல்வலு, அறிவாற்றல் , புலணுணர்வு மற்றும் உளவியல் திறன்களை மருத்துவ சிகிச்சைகள் மற்றும் உள்ளீடுகள் (implants) மூலம் செயற்கையாக மேம்படுத்துவதே புதிய திட்டமாகும்.

காயங்களின் வலிகளைத் தாங்குதல், ஒலிகளைச் செவிமடுக்கும் திறனைக் கூட்டுதல், களைப்பு, மன அழுத்தம், தனிமை உணர்வு என்பனவற்றை நீக்குதல் ஆகியவற்றுக்கான சிகிச்சைகளும் இவற்றில் அடங்குகின்றன.

ஏனைய சக்தி மிக்க நாடுகளைப்போன்று பிரான்ஸும் பயோனிக் சிப்பாய்களையும் (bionic soldiers) வலுவுள்ள சுப்பர் படைவீரர்களையும் (super soldiers) கொண்டிருக்கத் தக்க வகையிலான எதிர்கால இராணுவ உத்திகளை இத் திட்டங்கள் உள்ளடக்குகின்றன.

தற்போது இராணுவத்திடம் இத்தகைய திட்டங்கள் இல்லை என்றபோதிலும் எதிர்காலம் அவற்றை நோக்கியே உள்ளது என்று நாட்டின் இராணுவ அமைச்சர் கூறியிருக்கிறார்.

படை வீரர்களை செயற்கையாக மேம்படுத்துகின்ற இவைபோன்ற திட்டங்களை அமெரிக்காவும் சீனாவும் ஏற்கனவே தொடங்கி விட்டன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பன்றி ஒன்றினது மூளையை வெளியே இருந்து கணனி மூலம் கட்டுப்படுத்தும் அதி நவீன உயிரியல் தொழில் நுட்பம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டிருந்தது. அதே போன்று மண்டை ஓட்டினுள் செருகப்படக்கூடிய ஒரு சிறு கருவி (microchip) மூலம் மனித மூளைக்கு வெளியே இருந்து கட்டளைகளை வழங்கும் ஆராய்ச்சிகளிலும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க இராணுவம் மனித மூளையை கணனியுடன் இணைக்கும் நவீன ஆராய்ச்சிகளுக்காக பல மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவிட்டு வருகிறது.

அண்மையில் ஈரானிய அணு விஞ்ஞானி செயற்கை நுண்ணறிவு ஊட்டப்பட்ட- முக அடையாளம் (face-recognition)கண்டறியும் சூம் (Zoom) கமெராவுடன் கூடிய தானியங்கித் துப்பாக்கியாலேயே கொல்லப்பட்டிருக்கிறார் என்பது பெரும்பாலும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

காரில் 25 சென்ரி மீற்றர் இடைவெளியில் அமர்ந்திருந்த அவரது மனைவிக்கு சின்னக் கீறல் கூட விழாதவாறு விஞ்ஞானியின் முகத்தை மட்டும் சரியாக அடையாளம் கண்டு சுட்டுத் தள்ளியிருக்கின்றது அந்த நவீன துப்பாக்கி.

விஞ்ஞானியின் முகத்தை மட்டும் சூம் கமெரா மூலம் சரியாக அடையாளம் கண்டு (face-recognition) தன்பாட்டில் செயற்பட்டிருக்கிறது அத் துப்பாக்கி.

செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) ஊட்டப்பட்ட இத்தகைய ஆயுதங்கள் புழக்கத்துக்கு வந்திருப்பது உலக அளவில் ஆயுதக் கட்டுப்பாட்டு நிபுணர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

தற்சமயம் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்கிவிடக்கூடிய இத்தகைய நவீன ஆயுதங்களின் பாவனை உலகத்தை நினைத்துப்பார்க்க முடியாத அச்சுறுத்தலுக்குள் தள்ளிவிடலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவை (artificial intelligence) ஒருபோதும் இராணுவ நோக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று உலக அளவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் ஒப்பமிட்ட ஆவணம் ஒன்று வலியுறுத்துகிறது.

மறைந்த விஞ்ஞானி பேராசிரியர் ஸ் ரீபன் ஹாக்கிங் (Stephen Hawking) தலைமையிலான அறிவியலாளர்களது அந்தக் கோரிக்கை புறந்தள்ளப்படுவதை தற்போதைய உலக இராணுவ நடப்புகள் கோடிகாட்டுகின்றன.

குமாரதாஸன். பாரிஸ்.
12-12-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here