கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக மாணவியொருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்படிருக்கிறது.
இதேவேளை, கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கல்முனை உவெஸ்லி உயர்தரக் கல்லூரியில் தரம் 09 இல் கல்வி பயிலும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த மாணவியொருவரே இவ்விதம் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
அண்மையில் அக்கரைப்பற்றில் பணியாற்றும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததே. அவரது மகளே தற்போது தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் செ. புவனேந்திரன் உவெஸ்லி அதிபர் செ. கலையரசன் ஆகியோர் மாணவியின் தொற்றை உறுதிப்படுத்தினர். சுகாதாரத்துறையினரின் ஆலோசனையைப்பெற்று பாடசாலை நடாத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக கூறினார்கள்.
இதேவேளை ஆயிரம் மாணவர் படிக்கும் உவெஸ்லி பாடசாலைக்கு நேற்று 36 மாணவர்களே வருகை தந்ததாக அதிபர் தெரிவிக்கிறார். அதுவும் தரம் 11 பரீட்சைக்கு தோற்றவுள்ள 138 மாணவர்களில் 36 மாணவர்கள் வருகைதந்துள்ளனர். இதேவேளை அருகிலுள்ள பற்றிமா தேசிய கல்லூரிக்கு கடந்த சில தினங்களாக எந்த மாணவரும் பாடசாலைக்கு வரவில்லையெனத் தெரியவருகிறது.