முதல் முறையாக பிரெஞ்சு வாசி ஒருவர் இருநூறு மில்லியன் ஈரோக்களை அதிர்ஷ்டமாக வென்று உலக அளவில் பெரும் கோடீஸ்வரராக மாறியிருக்கிறார்.
“ஈரோ மில்லியன்” (EuroMillions) எனப்படும் பிரபல நல்வாய்ப்புச் சீட்டில் இந்த மாபெரும் தொகையை பிரான்ஸில் ஒருவர் வென்றுவிட்டார் என்ற தகவல் நேற்று வெள்ளி இரவு அறிவிக்கப்பட்டதும் பிரான்ஸின் லொத்தோ (Loto) உலகில் அந்த வெற்றிச் சாதனை பெரும் ஆரவாரங்களை ஏற்படுத்தியது.
200 மில்லியன் ஈரோக்கள் என்ற பரிசுத்தொகையை எட்டியிருந்த நிலையிலும் கடந்த சில வாரங்களாக அந்த பரிசுத்தொகை வெல்லப்படாமல் இருந்துவந்தது. ஆனால் நேற்றைய சீட்டிழுப்பில் 6-9-13-24-41என்ற அதிர்ஷ்ட இலக்கங்களும் 3,12ஆகிய இரண்டு நட்சத்திர இலக்கங்களும் வெற்றி இலக்கங்களாக அறிவிக்கப்பட்டன. அந்த இலக்கங்களுக்கு உரிய ஒரேயொரு வெற்றியாளர் பிரான்ஸ் நாட்டவர் என்பதும் தெரியவந்தது.
வெற்றியாளர்கள் தங்களை யார் என்று வெளிப்படுத்திப் பரிசுத் தொகையை பெற்றுக்கொள்வதற்கு 120 நாட்கள் அவகாசம் இருப்பதால் 200 மில்லியன் வென்ற சாதனையாளர் யார் என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவர வாய்ப்பில்லை.
பிரான்ஸில் Française des Jeux (FDJ) என்ற தேசிய லொத்தர் சபை 2004 இல் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வெல்லப்படும் பெருந்தொகை இது ஆகும். 2012 இல் ஒருவருக்கு கிடைத்த 170 மில்லியன் ஈரோக்களே பிரான்ஸில் வெற்றி கொள்ளப்பட்ட பெரும் அதிர்ஷ்டத் தொகையாக நேற்றுவரை இருந்து வந்தது.
இதற்கு முன்னர் பிரிட்டனில் 2012 இலும் 2019 இலும் இருதடவைகள் 190 மில்லியன் ஈரோக்கள் வெல்லப்பட்டிருந்தன. அதே ஜக்பொட் தொகை ஸ்பெயின்(2017), போர்த்துக்கல்(2014) ஆகிய நாடுகளிலும் அதிர்ஷ்டசாலிகளுக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் ஐரோப்பாவில் 200 மில்லியன் ஜக்பொட் வெற்றிகொள்ளப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.
குமாரதாஸன். பாரிஸ்.
12-12-2020