ஜேர்மனியில் நத்தார், புத்தாண்டு நெருங்கும் சமயத்தில் வைரஸ் தொற்று வேகம் எடுத்துள்ளது. இதனால் பெரும் எடுப்பில் தேசிய அளவிலான பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அமுலாக்க வேண்டிய அவசரம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
நத்தார் வரை காத்திருக்காமல் விரைந்து உடனடியாக எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டின் 16 மாநிலங்களின் தலைவர்களோடு அதிபர் அங்கெலா மெர்கல் வரும் ஞாயிறன்று அவசரமாக ஆலோசிக்கவுள்ளார்.
ஜேர்மனியில் வியாழன், வெள்ளி இரு தினங்களையும் உள்ளடக்கிய 24 மணிநேரத்தில் 29 ஆயிரத்து 875 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 598 மரணங்கள் பதிவாகி உள்ளன.
நாட்டில் வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் பதிவாகும் உயர்ந்த எண்ணிக்கை இது என்று அறிவிக்கப்படுகிறது.
நாட்டின் தொற்றுக் கட்டுப்பாட்டு நிறுவனமாகிய றொபேர்ட கொச் நிலையம் (Robert Koch Institute – RKI)
இத்தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
வைரஸின் முதலாவது அலையை வெற்றிகரமாகச் சமாளித்த ஜேர்மனி அதன் இரண்டாவது அலையைத் தடுப்பதற்காக கடந்த நவம்பர் 2ஆம் திகதி நாட்டை பகுதியாக முடக்கும் அறிவிப்பை மாநிலங்களுடன் சேர்ந்து கூட்டாக வெளியிட்டது.உணவகங்கள், அருந்தகங்கள் மூடப்பட்டன. பெரும் விளையாட்டு நிகழ்வுகள் தடுக்கப்பட்டன. வீடுகளில் இருந்து பணிபுரியமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
ஆனால் இரண்டாவது அலைக்காலப் பகுதியில் தொற்றுக்கள் அங்கு வேகமாக உயர்ந்து வருகிறது. உயிரிழப்புகளும் முன்னைவிட அதிகரித்துள்ளன.
இந்தவாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் மெர்கெல், “உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு ஐந்நூறு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறியிருந்தார்.
ஜரோப்பிய அயல் நாடுகளோடு ஒப்பிடும் போது ஜேர்மனி வைரஸ் பேரிடரை கையாண்ட விதம் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாகக் காட்டத்தக்க வகையில் வெற்றிகரமாக அமைந்தது. ஆனால் இரண்டாவது அலையின் வேகம் அந்தப் பெருமையைப் பறித்துச் செல்கிறது என்று அரசாங்க அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குமாரதாஸன். பாரிஸ்.
11-12-2020