முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்கும் பணி தடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு உயிரிழந்த படையினரிற்கான நினைவு நடுகல்கள் அவசர அவசரமாக நாட்டப்பட்டுள்ளன.
குறித்த இடத்தில் முன்னதாக சிறிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. அதனைவிட காணியின் உள் பகுதியில் ஆழமாகக் கிடங்குகள் வெட்டப்பட்டு அத்திவார பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே இதனருகில் கொக்கிளாய் ஆதார வைத்தியசாலை கட்டப்பட்டு, சுற்று வேலி அமைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை காணியில் விகாரைக்கென கையகப்படுத்தப்பட்ட மாகாண சபையின் கவலையீனத்தால் இழக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மறுபுறம் விகாரைக்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களுள்; ஒருவர், தனது காணியை விடுவிக்கக் கோரி நீதிமன்றில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் குறித்த இடத்தில் மீண்டும் விகாரை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காணி அதிகாரிகளால் மீண்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே விகாரை அமைக்கப்படும் பகுதியில் யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் தாக்குதலில் பிரிகேடியர் தர அதிகாரியொரவர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்ததாக கூறி நடுகல்களை நாட்டி விகாரை அமைப்பினை ஆரம்பிக்க முயற்சிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.