புத்தாண்டு பிறக்கும் இரவு முழுவதும் ஊரடங்கை அமுல் செய்யத் தீர்மானம்!

0
163

புத்தாண்டு பிறக்கின்ற டிசெம்பர் 31 ஆம் திகதி இரவு முழுவதும் ஊரடங்கை (couvre-feu) நடைமுறைப்படுத்துவது என்று அரசு தற்போது தீர்மானித்திருக் கிறது.

பொது முடக்க கட்டுப்பாடுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி முற்றாக நீக்கப்படமாட்டாது. ஆனால் அன்று தொடக்கம் நாடு முழுவதும் இரவு ஊரடங்கு எட்டு மணிமுதல் நடைமுறைக்கு வருகிறது. வெளியே நடமாடுவதற்கான அனுமதிப்பத்திரம் அன்றிலிருந்து ஊரடங்கு நேரங்களில் மட்டுமே அவசியமானதாகும்.பகல் பொழுதுகளில் நடமாடுவதற்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்காது.

இந்த விவரங்களை பிரதமர் Jean Castex இன்று வெளியிட்டார்.

புத்தாண்டுக் களியாட்டங்கள் பெருமளவில் தொற்றுப் பரவலுக்கு வாய்ப்பளிக்கும் என அஞ்சப்படுவதால் அன்றைய இரவில் ஊரடங்கை நீக்காமல் அமுலில் வைத்திருக்க முடிவாகி உள்ளது நாட்டு மக்கள் வீடுகளில் இருந்தவாறு புத்தாண்டை வரவேற்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

ஆனால் நத்தார் தினத்துக்கு முதல் நாள் மட்டும் (டிசெம்பர் 24) ஊரடங்கு முற்றாக நீக்கப்படும்.அன்றிரவு மக்கள் கட்டுப்பாடின்றி நடமாட அனுமதிக்கப்படுவர்.

வருட இறுதி நாளான டிசெம்பர் 31 ஆம் திகதி பெரும் எடுப்பில் மக்கள் ஒன்று கூடுவதால் ஏற்படக்கூடிய தொற்று ஆபத்து குறித்த கவலைகளை மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டு வருகின்றனர்.அது மூன்றாவது வைரஸ் அலை ஒன்றை உருவாக்கிவிடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

“2021 ஆம் ஆண்டைப் பாதுகாப்பதற்காக டிசெம்பர் 31 களியாட்டங்களை மறந்துவிடுங்கள்” என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் நாட்டு மக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளனர். இதனைக் கருத்திற் கொண்டே டிசெம்பர் 31 இரவு முழுவதும் ஊரடங்கை அமுல் செய்ய அரசு தீர்மானித்திருக்கிறது.

ஏற்கனவே அதிபர் மக்ரோன் அறிவித்திருந்தபடி வரும் டிசெம்பர் 15 ஆம் திகதி முதல் இரவு ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளது. இரவு 21 மணிமுதல் காலை 06 மணிவரை இந்த ஊரடங்கு அமுலாகும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதில் சிறு மாற்றமாக இரவு 20 மணிக்கு ஊரடங்கு ஆரம்பமாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கக் கூடியதாகவே இந்த இரவு ஊரடங்கு அமுல்படுத்தப்படவிருப்பது குறிப்பிடத் தக்கது.

முன்னர் அறிவிக்கப்பட்டவாறு சினிமா அரங்குகளும், அருங்காட்சியகம் போன்ற கலாசார நிலையங்களும் டிசெம்பர் 15 இல் திறக்கப்படமாட்டா என்ற தகவலையும் இன்று பிரதமர் வெளியிட்டார்.

நாளாந்த தொற்று எண்ணிக்கை ஐயாயிரம் என்ற அளவை எட்டுவதற்கு இன்னமும் நாள்கள் எடுக்கும் எனக் கணிக்கப்பட்டிருப்பதால் பொதுமுடக்கத்தை டிசெம்பர் 15 ஆம் திகதியுடன் முற்றாக நீக்குவது என்ற எதிர்பார்ப்பு கைகூடாமற்போகிறது.

“இந்த ஆட்டத்தில் நாங்கள் வெல்வதற்கு இன்னமும் காலம் இருக்கிறது” என்று இன்றைய செய்தியாளர் மாநாட்டில் பிரதமர் தெரிவித்தார்.

குமாரதாஸன். பாரிஸ்.
10-12-2020
வியாழக்கிழமை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here