பிரான்ஸின் தென் கிழக்கே அல்ப்ஸ் மலையை அண்டிய பிராந்தியத்தில் ஆறு பேர் பயணம் செய்த உலங்குவானூர்தி நேற்று இரவு விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
Savoie பிராந்தியத்தில் Bonvillard (Auvergne-Rhône-Alpes) நகரில் பனி மூட்டம் நிறைந்த மலைப் பிரதேசத்தில் – தரையில் இருந்து ஆயிரத்து 800 மீற்றர் உயரத்தில் – அந்த உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மீட்புப் பணியாளர்கள் மூன்று உலங்குவானூர்திகளில் உடனடியாக அந்த மலைப்பகுதியில் இறங்கியுள்ளனர். விபத்தில் சிக்கியவர்களைத் தேடும் பணி இரவிரவாக நீடித்தது.
கடைசியாக ஆபத்தான கட்டத்தில் தன்னை வெளியேற்றும் (eject himself) அவசர முடிவை விமானி தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அறிவித்திருக்கிறார். அதன் பின்னர் விமானத்தில் பயணித்த வேறு ஒருவரது தொடர்பு தமக்குக் கிடைத்திருப்பதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச் சறுக்கல் விளையாட்டில் ஈடுபடுவோரினதும் உல்லாசப் பயணிகளினதும் பாதுகாப்பு சேவையில் ஈடுபடும் உலங்குவானூர்தியே வீரர்களுடன் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. மேலதிக விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.
பிந்திய தகவல் :
விபத்துக்குள்ளான இந்த Airbus EC135 உலங்குவானூர்தியில் பயணித்த அறுவரில் ஐவர் உயிரிழந்துள்ளனர். விமானி உயிராபத்தான நிலையில் மீட்கப்பட்டிருக்கிறார். பனி மூட்டம் மீட்புப் பணிகளைப் பாதித்துள்ளது.
அதிபர் மக்ரோன் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் உயிரிழந்தவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.
பாரிஸ். 08-12-2020 குமாரதாஸன்