வருட இறுதிக் கொண்டாட்டங்களினால் மூன்றாம் அலைத் தொற்றுக்கு வாய்ப்பு!

0
132

வருட இறுதிக் கொண்டாட்டங்களினால் மூன்றாம் அலைத் தொற்றுக்கு வாய்ப்பு
மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

நத்தார் மற்றும் வருட இறுதிக் கொண்டாட்டங்கள் மூன்றாவது வைரஸ் அலை ஒன்றை உருவாக்கிவிடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் சிலர் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர்.

பிரான்ஸ் வைரஸின் இரண்டாவது அலையின் உச்சக்கட்டத்தைக் கடந்துள்ளது. நத்தார் பண்டிகைக்காலப் பகுதியை முன்னிட்டு பொது முடக்கக் கட்டுப்பாடுகளை வரும் 15 ஆம் திகதி தொடக்கம் மேலும் தளர்த்துவதற்கு அல்லது முற்றாக நீக்குவதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது.

நத்தார், மற்றும் வருட இறுதிக் கொண்டாட்டங்களையும் குடும்ப ஒன்று கூடல்களையும் எதிர்பார்த்துக் காத்துள்ள பொதுமக்கள், பொது முடக்கம் தளர்த்தப்பட்டால் கட்டுமீறி ஒன்று கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனைச் சுட்டிக்காட்டியிருக்கும் சில மருத்துவ அறிவியல் நிபுணர்கள் கொண்டாட்டங்கள், களியாட்டங்களின் விளைவாக மூன்றாவது கட்டத் தொற்றை நாடு எதிர்கொள்ள நேரலாம் என்று எச்சரிக்கின்றனர்.

தடுப்பூசி ஏற்றும் பணி தொடங்கினாலும் சாதாரண மக்களுக்கு அது கிடைப்பதற்கு மேலும் சில மாதங்கள் எடுக்கலாம் என்றும், அதற்குள் மூன்றாவது அலைத் தொற்று தீவிரமடைய வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த ஆண்டின் இறுதியையும் புத்தாண்டின் தொடக்கத்தையும் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் இப்படியே கடந்துவிட்டால் மற்றொரு பொதுமுடக்கத்தைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும் என்பது அவர்களது கணிப்பாக உள்ளது.

“நாட்டில் மக்கள் மத்தியில் இதுவரை உருவாகி இருக்கும் பொதுவான நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு மூன்றாவது வைரஸ் அலை ஒன்றில் இருந்து எங்களைப் பாதுகாக்கின்ற அளவுக்கு இல்லை” – என்று பிரபல தொற்றுநோயியல் நிபுணர் Simon Cauchemez ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை – இன்று மாலை செய்தியாளர் மாநாட்டில் பேசிய சுகாதாரப்பணிப்பாளர் நாயகம் ஜெரோம் சொலமன், ஒரு நாள் தொற்று எண்ணிக்கை ஐயாயிரம் என்ற அளவை எட்டுவதற்கு இன்னும் காலம் எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 15 ஆம் திகதி பொது முடக்கத்தை நீக்கிவிட்டு அன்று முதல் இரவு ஊரடங்கை அமுலுக்குக் கொண்டுவரமுடியுமா என்பதை நிச்சயிக்க முடியாத நிலைமை நீடிப்பதையே அவரது இந்தக் கூற்று உணர்த்தி உள்ளது.

கடைசியாக ஆற்றிய தொலைக்காட்சி உரையில், நாளாந்தத் தொற்று எண்ணிக்கை ஐயாயிரத்துக்கும் குறைவான அளவைக் காட்டும் பட்சத்திலேயே பொது முடக்கம் முற்றாக நீக்கப்படும் என்பதை அதிபர் மக்ரோன் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் தற்போதைய நிலைவரத்தை மதிப்பீடு செய்வதற்காக சுகாதாரப் பாதுகாப்பு சபையின் கூட்டம் எலிஸே மாளிகையில் புதன்கிழமை கூட்டப்படவுள்ளது.


07-12-2020. திங்கட்கிழமை.
பாரிஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here