விமானப் பயணிகளுக்குத் தடுப்பூசியை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசனை!

0
151

கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வெற்றியளித்திருப்பது பற்றிய செய்திகள் விமான சேவைகளை விரைவில் மீளவும் வழமைக்குக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளன.

விமானப் பயணிகளது எண்ணிக்கை வரும் புத்தாண்டில் சடுதியான பெருக்கத்தைக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முடங்கிக் கிடக்கும் விமான சேவைகளை அடுத்த ஆண்டு கோடை காலத்தில் மீளவும் ஆரம்பிக்க வழி திறக்கும் என்று விமான சேவை நிறுவனங்கள் பலவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

சேவைகள் மீண்டும் தொடங்கும் சமயத்தில் நாடுகளுக்கு இடையிலான விமானப் பயணங்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற சுகாதார விதிமுறைகளுடன் வைரஸ் தடுப்பூசி ஏற்றியமைக்கான சான்றிதழும் கட்டாயமாக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவின்’குவாண்டாஸ்’
(Qantas) விமான சேவை நிறுவனம் தனது பயணிகளுக்கு தடுப்பூசியைக் கட்டாய விதிகளுக்குள் உள்ளடக்குவது பற்றிப் பரிசீலித்துள்ளது.

பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்பாக தடுப்பூசி உத்தரவாதச் சான்றிதழைப் பரிசோதிப்பது தொடர்பாக ஏனைய விமான சேவை நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டுவருவதாக ‘குவாண்டாஸ்’ நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் டெல்ரா விமான சேவை நிறுவனத்தின் (Delta Air Lines) பிரதம நிறைவேற்று அதிகாரியும் இதுபோன்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

அமெரிக்க அரசு கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் உள்வரும் வெளிச்செல்லும் பயணிகள் சகலரிடமும் “தடுப்பூசிக் கடவுச்சீட்டு”(vaccination passport) எனப்படும் ஆவணத்தைப் பரிசோதிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

தடுப்பூசி ஆவணங்களைப் பரிசீலிப்பது, விமான நிலையத்தில் வைத்தே தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளக் கூடிய வசதிகளை வழங்குவது போன்ற புதிய திட்டங்கள் அடுத்த ஆண்டில் நடைமுறைக்கு வரலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.


Kumarathasan. Paris.
03-12-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here