இதை யார் விசாரிப்பார் ?
“”””””””””””””””””””””””””””””””””””””””
வானத் திருந்துவந்து வாரிப்
பொழிந்தமழை
ஏனோ தெரியவில்லை எதையோபோய்த்
தேடுதது
வயல்நிரப்பி, அயல்நிரப்பி, கிணறுகேணி
குட்டையெலாம்
இயலும் வரைநிரப்பி இன்னும் நிரப்புதற்கு
இடமெதுவுங் கிடையாமல் அலைந்தலைந்து தேடுதது.
அன்னம்மாக் கிழவியின்ர அடுக்களைக்குள்
போய்ப்புகுந்து
சின்னப் பேணிகள், சீயாய்காய் போத்தல்,
பென்னம் பெரிய மாப்போடும்
பச்சைவாளி
பன்னச் சத்தகத்தால் பொத்திவச்ச பெட்டியெல்லாம்…
என்ன நினைச்சிச்சோ எடுத்தெறிஞ்சு
கவுத்துவைத்து
அதற்குள்ளும் தேடியது.
அங்கேயும் காணோமாம்.
பிறகு…,
பொன்னம் பலத்தாருக்கு பொருளாதார
அமைச்சு
போனவருஷம் குடுத்த புதுஆட்டுக்
கொட்டிலையும்
புரட்டி விழுத்திவிட்டு புகுந்துபோய்த் தேடியது;
அங்கும் காணோமாம்.
என்னத்தைத் தேடுதது?
போனஆண்டு வந்துநின்ற குளத்தைத்தான்
காணலையாம்…
ஆனகொள்கை இல்லாமல் அரசியலில்
வெற்றிபெற
ஈனக் குணத்தார்…, இருந்தஒரு குளத்துக்கு
ஊனம் விளைவிக்க
மண்கொட்டி நிரப்பி… மட்டமாக்கி… மதில்கட்டி
கண்ணுக் கழகாகக் கட்டடங்கள் கட்டவென்றும்
கடைத் தொகுதி கட்டவென்றும்…
குட்டைகளை வெட்டையாக்கி மரங்களினை
மொட்டையாக்கி
குளத்தைக் களவெடுத்துக் கொண்டுபோய்ப்
புதைத்துவிட்டார்
அதைத்தானாம் தேடுதது.
பொன்னம் பலத்தாரின் புதுஆட்டுக் கொட்டில்
பாறி விழுந்தவுடன் பலபேர்கள்
ஓடிவந்தார்
அனர்த்தப் பிரிவினது அதிகாரி,
அவரோடு அலுவலர்கள்…
அப்பப்பா எத்தனைபேர்…!
இந்நாட்டில்…,
காணாமல் போனவரைக் கண்டு பிடிப்பதற்கும்,
அவர்நலனில்
கரிசனைகள் கொள்வதற்கும், கண்துடைப்புக் காயேனும்
காரியா லயமுண்டாம்.
காணாமல் போயிருக்கும் குளத்துக்கு…?
Va vadivalakaiyan