சாவகச்சேரி – கல்வயல், மட்டுவில் பகுதிகளில் நேற்றுமுன்தினம் (02) புதன்கிழமை இரவு கடுமையான மழை பெய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஐந்து வீடுகளில் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த முதியவர்களை அச்சுறுத்தி நகைகள், ஒரு தொகைப் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி காவல்துறையினர் கொள்ளையர்கள் நால்வரை கைது செய்துள்ளனர்.
கைது செய்தவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று கொண்டிருந்த வேளை சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் பொலிஸ் பிடியில் இருந்து கைவிலங்கோடு சந்தேக நபர்களில் ஒருவர் தப்பித்து ஓடியுள்ளார்.
இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரமாக சாவகச்சேரி டச் வீதிப் பகுதிகளில் காவல்துறையினர் தேடுதல் நடத்தி வீடோன்றுக்குள் மறைந்திருந்த சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதேவேளை, மானிப்பாய் வீதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி 7 பவுன் தங்கம் மற்றும் 50ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்தவர்கள் சூறாவளி ஏற்பட்டால் தங்க நகை மற்றும் பணத்தை பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு செல்வதற்காக ஒரு இடத்தில் வைத்திருந்தபோது கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
அதேவேளை ஆனைக்கோட்டை கிராமத்தில் உள்ள மற்றுமொரு வீட்டிற்கு வந்த இந்த கொள்ளையர்கள் அங்கும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் பிற்பகல் வேளையில் கொள்ளைக்காக வீட்டிற்குள் புகுந்துள்ளனர். முகக் கவசம் அணிந்து இந்த நபர்கள் வீடு புகுந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.