பாதசாரிகள் மீது மகிழுந்தை மோதி தாக்குதல்: ஜேர்மனியில் கைக்குழந்தை உட்பட ஐவர் பலி! 30 பேர் காயம்!!

0
164

ஜேர்மனியில் மகிழுந்தை பாதசாரிகள் மீது வேகமாகச் செலுத்தி நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.30 பேர் வரை காயமடைந்திருக்கின்றனர்.

உயிரிழந்தவர்களில் ஒன்பது மாத கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாகக் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை உயரக் கூடும் என்று முதலில் வெளியாகிய செய்திகள் தெரிவித்தன.

ஜேர்மனியின் மேற்குப் பகுதியில் ட்ரையர் (Trier) என்னும் நகரில் இந்தத் தாக்குதலை நடத்திய 51 வயதான சாரதி ஒருவரைப் பொலீஸார் கைதுசெய் திருக்கின்றனர். காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நகரில் பாதசாரிகள் நடமாடும் பகுதியில் வழமையாக நத்தார் சந்தை நடத்தப்படும் இடத்திலேயே சிவிலியன்கள் மகிழுந்தினால் மோதித் தாக்கப்பட்டுள்ளனர்.மக்கள் கூட்டத்தின் மீது மகிழுந்து மோதிய போது பலரும் நீண்ட தூரத்துக்குத் தூக்கி வீசப்பட்டனர் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் பெரும் அவலக் குரல்கள் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.

காயமடைந்தவர்களை அவசர மீட்பு சேவையினர் மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். சம்பவம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொது மக்களைக் கேட்டிருக்கும் காவல்துறையினர், தாக்குதலை எவரேனும் வீடியோ படமாக்கி இருப்பின் அதனை சமூகவலைத் தளங்களில் பகிர்வதைத் தவிர்த்து நேரடியாகத் தம்மிடம் அனுப்பி வைக்குமாறும் அறிவித்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலின் பின்னால் மதமா அல்லது அரசியல் நோக்கமா உள்ளது என்பதை அறிய தாக்குதலாளியிடம் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

தாக்குதலாளி ஒரு தீவிர மனநோயாளி என்றும் அவர் மது போதையில் காணப்பட்டார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

சம்பவம் குறித்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளார் எனத் தெரிவித்திருக்கும் அதிபர் அங்கெலா மெர்கல், பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்தினருக்கு தனது ஆறுதலை வெளியிட்டுள்ளார்.

ஜேர்மனியின் முக்கிய நகரங்களில் நத்தார் காலப்பகுதியில் இது போன்ற வாகனத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.


Kumarathasan. Paris.
01-12-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here