மொழி ஒன்றாகினும் அதை உச்சரிக்கும் விதங்கள் வேறு வேறு.உங்கள் பிரெஞ்சு மொழியின் உச்சரிப்பைக் குறைவாக எண்ணாமல் துணிந்து பேசுங்கள்.
ஒருவருடைய பிரெஞ்சு மொழி உச்சரிப்பை(accent) அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு காட்டப்படுவதைக் குற்றமாகக் கருதும் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது.
பிரான்ஸின் நாடாளுமன்றத்தின் கீழ்ச் சபையில் இந்தச் சட்டமூலம் கடந்த வியாழனன்று நிறைவேறியது.
மொழி ஒன்று என்ற போதிலும் பிரெஞ்சு மொழியை உச்சரிக்கும் விதம் நாட்டின் பிராந்தியங்களில் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது.
பிரான்ஸ் மண்ணில் வசித்தாலும் ஆப்பிரிக்கர்கள், அரேபியர்கள், ஈழத்தமிழர்கள் போன்ற வெளிநாட்டவர்கள் மொழியை உச்சரிக்கும் விதம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
உலகின் ஏனைய மொழிகளைப் பேசும் நாடுகளிலும் இதேபோன்றே பிராந்தியங்களுக்கிடையே உச்சரிப்பு மாறுபாடுகள் உள்ளன. அத்தகைய பேசும் பாணியைக் காரணம் காட்டி ஒருவர் பாகுபடுத்தப்படும் அல்லது அவமதிக்கப்படும் சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கின்றன.
இந்த உச்சரிப்புப் பாகுபாட்டை இனவெறியின் ஒரு வடிவமாகக் கருதுவதற்குப் பிரான்ஸின் புதிய சட்டம் வழிசெய்கிறது. குற்றமாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஒருவருக்குக் குறைந்தது மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 45 ஆயிரம் ஈரோக்கள் அபராதமும் விதிக்கப்படுவதற்கு இச்சட்டம் இடமளிக்கிறது.
நாட்டின் தென்பகுதியில் பேசப்படும் பிரெஞ்சு மொழியின் உச்சரிப்பில் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் ஒருவரை அரசியல் பிரமுகர் ஒருவர் திருப்பி விளக்கம் கேட்டு அவமதித்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
மூத்த அரசியல் பிரமுகரான தீவிர வலது சாரி மெலஞ்சோன் (Jean-Luc Melenchon) ஊடகவியலாளரைப் பார்த்து, “கொஞ்சம் விளங்கும் படியாக எவராவது பிரெஞ்சு மொழியில் கேள்வி எழுப்ப முடியுமா” என்று திருப்பிக் கேட்கும் காட்சி தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டு பெரும் விமர்சனங்களைக் கிளப்பி இருந்தது.
குமாரதாஸன். பாரிஸ்.
28-11-2020