ரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு ஒத்திவைப்பு.

0
101

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாபாய கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவிஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 30.11.2020 இன்றையநாள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வாறு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் 2021ஆம்ஆண்டு மேமாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், கோட்டாபய கடற்படை முகாமிற்கு முன்பாக இடம்பெற்ற காணி அபகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் 28.02.2018அன்று முல்லைத்தீவு போலீசாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் பிணையில் விடுதலையாகியிருந்தார்.

இதேவேளை, வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் பிணைகோரி, சட்டத்தரணி ஊடாக பிணையில் வெளிவந்தார்.

அதனைத்தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர்அணி உறுப்பினர் அன்ரனிஜெகநாதன் பீற்றர்இளஞ்செளியன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்சம்மேளன நிரவாக உறுப்பினர் அன்னலிங்கம் சண்முகலிங்கம் ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலைசெய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறாக நால்வர் மீதும் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் நிலையில், 30.11.2020 இன்றைய தினம் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில், நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இன்றைய வழக்கு விசாரணைகளில் நில அளவைத் திணைக்களத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டோர் சார்பில், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், அ.பீற்றர் இளஞ்செளியன், அ.சண்முகலிங்கம் ஆகிய நால்வரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இந் நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து இந்த வழக்குடன் தொடர்புடைய அறிக்கை இன்னும் கிடைககப்பெறாமையால், குறித்த வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மேமாதம் 17ஆம் திகதிக்கு தவணையிடப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here