காவல்துறை வன்முறைகள்,அரசின் புதிய பாதுகாப்புச் சட்டங்கள் என்பவற்றைக் கண்டித்து பாரிஸில் சனிக்கிழமை அன்று நடந்த ஆர்ப்பாட்டங்களில் பத்திரிகைப் படப்பிடிப்பாளர் ஒருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
நகரில் பஸ்ரில் சதுக்கம் (Place de la Bastille) பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைப் படம் பிடித்த சிரியா நாட்டவரான சுயாதீன ஊடகவியலாளர் அமீர் அல்ஹாபி (Ameer Alhalbi) காவல்துறையினர் நடத்திய குண்டாந்தடிப் பிரயோகத்தில் முகத்தில் படுகாயமடைந்தார்.
24 வயதுடைய அமீர் அல்ஹாபி போர் காரணமாக சிரியாவில் இருந்து வெளியேறி பிரான்ஸில் புகலிடம் பெற்றவர் .சிரியப் போரின் போது அலப்போவில் இருந்தவாறு ‘போல்க்கா’ சஞ்சிகைக்கும் (Polka Magazine), ஏஎப்பி செய்தி (AFP) நிறுவனத்துக்கும் படப்பிடிப்பாளராகப் பணியாற்றிய அவர் சில சர்வதேச ஊடக விருதுகளை வென்றுள்ளார்.
தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்திய பிறகும் காவல்துறையினர் அவரை மோசமாகத் தாக்கி காயப்படுத்தியிருப்பதைக் குறிப்பிட்டு, எல்லை கடந்த ஊடகவியலாளர் அமைப்பு (RSF) இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
காவல்துறையினர் படம் எடுத்துப் பகிர்வதைத் தடை செய்வது உட்பட சர்ச்சைக்குரிய சில சரத்துகளைக் கொண்ட “குளோபல் செக்கியூரிட்டி” என்னும் புதிய பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாடெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
ஞாயிறன்று நடந்த ஆர்ப்பாட்டங்களில் காவல்துறையினர் 61 பேர் காயமடைந்தனர் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு இடையே புகுந்து வன்செயல்களில் ஈடுபட்ட 81 பேர்வரை கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.
29-11-2020.