முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்புக்கு 105 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் 108 இராணுவத்தினரும் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க போதிய வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர்
ரொஹான் வெலிவிட்ட, விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த குற்றச் சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பயன்பாட்டுக்கு ஹெலிகொப்டர் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளபோதும் அவ்வாறு எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் அவ்வாறான வசதிகளை மஹிந்த ராஜபக்ஷ கோரவும் இல்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ரொஹான் வெலிவிட்டவினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘முன்னாள் ஜனாதிபதியின் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக ஹெலிகொப்டர் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை. கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி அவர், கொழும்பிலிருந்து தங்காலைக்கு தனது உத்தியோகபூர்வ ஹெலிகொப்டரில் சென்றார். அதுவே அவர் இறுதியாக ஹெலிகொப்டரில் மேற்கொண்ட பயணமாகும். அன்று முதல் இன்று வரை இந்த அரசாங்கத்தினால் அவருக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதேபோன்று, தனக்கு ஹெலிகொப்டர் வசதி வேண்டும் என அவர் இதுவரையில் கேட்கவும் இல்லை. மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்புக்காக 105 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மூன்று பேர் உள்ளனர். உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இருப்பினும் அவர்களின் கடமைகளை மேற்கொள்வதற்காக காரியாலய வசதிகள் எவையும் வழங்கப்படவில்லை. குறைந்த வசதிகள் கொண்ட ஓரிடத்திலேயே அவர்களுக்கு தங்குமிட வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
உதவி பொலிஸ் அத்தியட்சர்களின் மூன்று வாகனங்களையும் தவிர, அந்த 105 பேருக்கும் வேறு எந்த வாகனங்களோ அல்லது மோட்டார் சைக்கில்களோவழங்கப்படவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 17 வாகனங்களும் காரியாலய தொலைபேசிகளும் கூட பொலிஸ் திணைக்களத்தால் மீளப் பெறப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக கிடைக்கப்பெற்ற தனிப்பட்ட ரீதியிலான வாகனங்களையும் வாடகைக்கு பெறப்பட்ட வாகனங்களையுமே இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 108 இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் உயர்நிலைப் பதிவி வகிக்கும் இருவரும் அடங்குகின்றனர். இருப்பினும், அவர்களுக்கு இராணுவத்திலிருந்து கிடைக்க வேண்டிய உத்தியோகபூர்வ வாகனங்களோ அல்லது காரியாலய வசதிகளோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அத்துடன், இந்த 108பேரின் போக்குவரத்துக்குக்கூட ஒரு வாகனம் கூட வழங்கப்படவில்லை. தங்குமிட வசதிகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பயன்பாட்டுக்கென முக்கியஸ்தர்களுக்கான வாகனங்கள் மூன்றும் பாதுகாப்பு வாகங்கள் மூன்றும் மாத்திரமே ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளபடி, மஹிந்த ராஜபக்ஷவின் போக்குவரத்துக்காக எந்தவொரு ஹெலிகொப்டரும் வழங்கப்படவில்லை. அது வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Close