மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு பாரிஸில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் புற நகரங்களின் மக்கள் பிரதிநிதிகள் பலரும் செய்திகளையும் வீடியோ பதிவுகளையும் வெளியிட்டிருக்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினரும் பல்லின சமூகத்தவர்கள் வசிக்கும் பாரிஸின் புறநகரான சார்ஸல் (Sarcelles) நகரின் முன்னாள் முதல்வருமாகிய பிரான்ஷூவா பெப்பொனி (François Pupponi) தனது முகநூல் பதிவில், “தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஹாகஸ் லே ஹோனர்ஸ் சார்ஸல் (Garges-les-Gonesse and Sarcelles) தமிழ்ச் சங்கத்தால் ஆண்டு தோறும் நெல்சன் மண்டேலா விளையாட்டரங்கில் முன்னெடுக்கப்படும் மாவீரர் நினைவு தின நிகழ்வில் இன்றைய தினம் கலந்துகொண்டதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
” தங்களது உரிமைகளுக்காக போரில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு இன்றைய நிகழ்வில் மரியாதை செலுத்தினேன். அவர்கள் தங்கள் மண்ணில் சுதந்திரத்துடனும் சமாதானத்துடனும் வாழ்வதற்காக தினமும் இங்குள்ள தமிழர்களோடு சேர்ந்து போராடி வருகிறேன்.”
“அவர்கள் அனுபவித்த துயரங்கள் அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதற்கான எனது அர்ப்பணிப்பு இது “
-இவ்வாறு பிரான்ஷூவா பெப்பொனி (François Pupponi) தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.
இவர் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பாரிஸ் பிராந்தியத்தின் எட்டாவது தேர்தல் தொகுதியான Val-d’Oise பகுதியை பிரதிநிதித்துவப்படுத்திவரும் பிரான்ஸ் சோசலிஸக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
சார்ஸல் நகரின் தற்போதைய முதல்வர்
பற்றிக் ஹட்டா (Patrick Haddad) வெளியிட்டிருக்கும் முகநூல் பதிவில்-
“உலகின் பல நாடுகளிலும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான செழிப்புள்ள மொழி, மற்றும் பண்பாட்டைக் கொண்டுள்ள 80 மில்லியன் தமிழர்கள் வசிக்கின்றனர்.
” இலங்கையில் நீடித்த உள்நாட்டுப் போர் தற்போது கடந்த காலத்தின் ஒரு வடு ஆகும். இனிமேல் தமிழ் மக்களின் எதிர்காலம் அமைதியிலும் அவர்களது அடையாளங்களை மேம்படுத்துவதிலும் ஆழ வேரூன்றிவிடும் என நம்புகிறேன்.
” தமிழர்களின் அங்கீகாரத்துக்குப் பங்களிப்பதில் நட்பு நகரமான சார்ஸல் (Sarcelles) பெருமை கொள்கிறது “-என்று தெரிவித்துள்ளார்.
*படங்கள் :மாவீரர் தின நிகழ்வில் பிரான்ஷூவா பெப்பொனி எம். பி. (François Pupponi) மற்றும் முதல்வர் பற்றிக் ஹட்டா (Patrick Haddad).
27-11-2020. வெள்ளிக்கிழமை