தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் அறிக்கை!

0
1234

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
27.11.2020
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர்நாள். உலகில் மிகவும் தொன்மையான எமது இனத்தின் தேசிய சுயநிர்ணய உரிமையையும் சொந்த மண்ணையும் மீட்டெடுத்து, எமது மக்கள் தன்மானத்தோடு கௌரவமாக வாழவேண்டுமென்ற தார்மீகக் குறிக்கோளுக்காக மடிந்த மானமறவர்களை, எமது அகமனதில் தரிசித்து வணக்கம் செலுத்தும் தேசிய நாள்.
தமிழீழ மக்களின் சுதந்திரப்போராட்டத்தை, இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான போராட்டமாக முன்னிறுத்திய உத்தமர்களைப் போற்றிவழிபடும் புனிதநாள். மனித சுயத்தின் ஆசைகளைத் துறந்து, மானுடத்தின் உரிமைகளுக்கான பொதுநல இலட்சியத்துக்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்துக்காகச் சாவைத்தழுவிய புனிதர்களை, எம் நெஞ்சங்களில் இருத்தி நெய்விளக்கேற்றிப் பூசிக்கும் தூய நாள்.
மாவீரர்கள், எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவழிப்பின் கொடுமைகளுக்கெதிராக, தமது சாவையே துச்சமாகக் கொண்டு போர்புரிந்தார்கள். பாரம்பரியமாக நாம் வாழ்ந்துவரும் எமது பூர்வீக மண்ணுக்காகவும் எமது மக்களின் சுதந்திரத்துக்காகவுமே களமாடிக் காவியமானார்கள்.
மாவீரர்களின் உறுதியும், அடங்காத தாய்மண் பற்றும், தன்னலமற்ற விடுதலைக்கான துறவறமுமே உலக அரங்கில் எமது இனத்தைத் தலைநிமிர வைத்தது. அவர்களின் உயர் ஒழுக்கமே எமது விடுதலைப் போராட்டத்தை உலகம் பார்த்து அதிசயிக்க வைத்தது. மாவீரர்களின் ஒப்பற்ற தியாகமே தமிழரின் வீரத்தையும் தமிழீழ சுதந்திர தாகத்தையும் உலகறியச் செய்தது. அவர்களது ஈடிணையற்ற அர்ப்பணிப்பே, எமது விடுதலை வேட்கைக்கு உரமூட்டி, எமது இனத்தின் சுதந்திரப்போராட்ட இயக்கவியலை சதா உந்திக்கொண்டிருக்கிறது. இந்நாளில், மாவீரர்களை எமது விடுதலைப் போராட்டத்திற்கு உவந்தளித்த பெற்றோர்களையும் குடும்ப உறவுகளையும் தேசத்தின் பெரு மதிப்பிற்குரியவர்களாகப் போற்றி நிற்கிறோம்.
எமது விடுதலைப் போராட்டம், எழுபதாண்டு கால நீட்சிபெற்றுச் செல்கின்றது. இன்று வரை பல்லாயிரக் கணக்கில், எமது மாவீரர்கள் விடுதலைப் போரில் களமாடி வரலாறாகியுள்ளார்கள். எமது இனத்தைப் பேரழிவிலிருந்து பாதுகாத்து, எமது தாயக பூமியை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்க, எமது விடுதலை இயக்கம் அளப்பரிய அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளது.
தமிழினம் ஆயுதப்போரை விரும்பித் தெரிவுசெய்யவில்லை. அப்போர், சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிட்டுத் திணிக்கப்பட்டது. எம் மக்கள் மீதான சிங்கள இராணுவ அடக்குமுறை தீவிரமடைந்த கட்டத்தில், எமது அமைதிவழிப் போராட்டங்கள் வன்முறைகள் மூலம் நசுக்கப்ட்டபோது எமது மக்களைப் பாதுகாக்கவும் எமது மண்ணை மீட்கவும் நாம் ஆயுதமேந்திப் போராடும் நிலை ஏற்பட்டது. இருந்தபோதும், எமக்குச் சந்தர்ப்;பங்கள் கிடைத்த போதெல்லாம் நாம் அமைதி வழியையும் சமாதான முயற்சிகளையும் கையிலெடுத்தே வந்துள்ளோம். திம்புவில் தொடங்கி யெனீவா வரை, பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றோம். ஆனாலும் பௌத்த சிங்கள பேரினவாத அரசின் கடும் போக்கும் நேர்மையற்ற அரசியல் அணுகுமுறைகளும் திட்டமிடப்பட்ட தமிழின அழிப்புமே, அனைத்துச் சமாதான முயற்சிகளும் பயனற்றுப் போகக் காரணங்களாகின. சிங்களப் பேரினவாத அரசு, பிராந்திய நலனை சாதகமாகப் பயன்படுத்திப் பொய்ப்பரப்புரைகள் ஊடாகப் பல நாடுகளின் உதவியுடன் கடும்போரை தமிழர் தேசத்தின் மீது திணித்தது.
போர் அழிவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக, எமது இயக்கம் பெரும் முயற்சிகளைச் செய்தபோதும் உலகநாடுகள் பாராமுகமாக இருந்தன. தமிழினத்துக்கு எதிரான வன்முறையில் தீவிரம்காட்டி, தமிழ்மக்களைக் கொன்றொழித்த போரை நிறுத்துமாறு, தமிழ்மக்கள் தமது சக்திக்குட்பட்டு உலகநாடுகளெங்கும் போராடியபோதும் இந்த உலகம் எமது மக்களைப் பேரழிவிலிருந்து காப்பாற்றத் தவறிவிட்டது, இந்நிலையில், நாளாந்தம் ஆயிரக்கணக்காகக் கொன்றொழிக்கப்பட்டுக்கொண்டிருந்த எமது மக்களையும், காயங்களுக்கு இலக்காகி மருத்துவ வசதியின்றி ஒவ்வொரு நொடியும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களையும் பாதுகாப்பதற்காகவே எமது ஆயுதங்களை மௌனித்தோம்.
அதன் பின்னரும் சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட இனவழிப்பு இன்றுவரை தொடர்கின்றது. தமிழீழத்தில், சிங்கள இராணுவம் திட்டமிட்டு ஆக்கிரமித்த தமிழரின் பூர்வீக நிலப்பரப்பு, இன்னும் உரியவர்களிடம் கையளிக்கப்படாதுள்ளது. தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைச் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து மகாவலித்திட்டம், தொல்பொருள் ஆய்வுத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்ற போர்வையில் சிங்களக்குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி சிங்கள ஆக்கிரமிப்பை விரிவுபடுத்திவருகின்றது.
தமிழ் மக்களின் பொருளாதார வளங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் சுரண்டிவருவதுடன், தொடர்ந்தும் எம்மக்களைச்; சிங்களப் பேரினவாதத்திடம் கையேந்தும் நிலையில் வைத்துள்ளது. இதனால், தமிழ்மக்கள் அகதிகளாக அடிப்படை வசதிகளற்றநிலையில் வறுமையில் வாழ்துவருகின்றனர்.
தமிழீழ மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க சாதி, மதம் மற்றும் பிரதேசவாத முரண்பாட்டுக் கருத்துக்களை உருவாக்கிவருவதோடு, எமது இளைய தலைமுறையினரைச் சிதைக்கும் நோக்குடன் போதைப்பொருள் பாவனை, கலாச்சாரச் சீரழிவு மற்றும் வன்முறைகளை ஊக்குவிப்பதன் மூலம் எமது இளையதலைமுறையினரின் கல்விவளர்ச்சியினைத் தடுக்கும் மூலோபாயத்தினை சிறீலங்கா அரச கட்டமைப்புகள் முன்னகர்த்திவருகின்றன.
சிறீலங்காப் பேரினவாத அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையுடன் தொடர்புபட்ட படையினரை நீதி விசாரணையிலிருந்து பாதுகாத்து வருவதுடன் அவர்களுக்கு அரச உயர்பதவிகளையும் வழங்கியுள்ளது. இதேவேளை, பல ஆண்டுகளாக அரசியற்கைதிகளாகவுள்ள எம்மவர்களை விடுதலைசெய்யாது, தொடர்ந்தும் பலர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றார்கள். இதற்கு நீதி கேட்டு எமது மக்கள் சர்வதேச சமூகத்திடம் குரல்கொடுத்து வருகிறார்கள். காணி அபகரிப்பு, அரசியற் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான போராட்டங்களென பல வழிகளிலும் உலகத்திடம் நீதிவேண்டிப் போராடிவருகின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமை தொடர்பில் முடிவுகள் ஏதுமின்றி அவர்களது உறவுகளும் சாவடையும் அவலநிலை இன்றுவரை தொடர்கிறது. முன்னாள் போராளிகளின் நிலைமை துன்பத்திற்கிடமாகவே ஒவ்வொரு நாளும் நகர்கின்றது. தான் நினைத்த நேரத்தில் யாரையும் கைது செய்யலாம், எவ்வழக்கின் கீழும் தண்டிக்கலாம் என்ற நிலையிலும், சிறைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பலர் சந்தேகத்திற்கிடமான முறையிலும் சாவடைந்து வருகின்றனர். இதேவேளை, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பலரும் பாதுகாப்பின்றிச் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார்கள். பௌத்த சிங்களப் பேரினவாத அரசு, திட்டமிட்டே அவர்களுக்கான அடிப்படை உதவிகளை வழங்காது தவிர்த்து வருகின்றது.
எமது தேசத்தையும் மக்களையும் பாதுகாப்பதற்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த வீர மறவர்களின் துயிலும் இல்லங்களைச் சர்வதேச சட்ட விதிகளை மீறி அழித்ததுடன். அவர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கே தடைகளை விதித்து இடையூறுகளை ஏற்படுத்தி எம் மக்களை அச்சுறுத்துவதன் மூலம் தனிமனித சுதந்திரமும், பேச்சுரிமையும் மறுக்கப்பட்டுவருகின்றது.
அன்பான மக்களே!
தமிழீழ விடுதலைக்கான எமது ஆயுதப்போர் மௌனித்த பின்னர், தாயக மற்றும் புலம்பெயர் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களும் நடவடிக்கைகளும் ஐக்கிய நாடுகள் அவையினர் தமது விசாரணைகளை முன்னெடுக்க வழிகோலியிருந்தன. 2011 இல் நிபுணர்குழுவின் விசாரணையும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் 2014 இல் முன்னெடுக்கப்பட்ட இலங்கைக்கான விசாரணைக்குழுவின் (OISL) விசாரணையும், இலங்கைத்தீவில் நடந்த போர்க்குற்றம், மனித நேயத்திற்கெதிரான குற்றம், மோசமான படுகொலைகள், சர்வதேச சட்டமீறல்கள் போன்ற குற்றங்களுக்காகச் சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டுமென்பதைப் பரிந்துரைத்திருந்தன.
பௌத்த சிங்கள பேரினவாதத்தினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழினப்படுகொலை கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்படுமெனக் கருதிய சிறீலங்கா அரசு, காலத்தை இழுத்தடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. கண்துடைப்பு ஆணைக்குழுக்களை அமைத்து, கால நீடிப்பினைப் பெற்று, சர்வதேச விசாரணைப் பரிந்துரைகளைப் பலமிழக்கச்செய்யும் விதத்தில் நடந்துகொண்டது. 2015 இல், ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பரிந்துரையை ஏற்றுக்கொண்ட பின்னரும், கண்துடைப்பு ஆணைக்குழுக்களை உருவாக்கி இன்று அதிலிருந்தும் விலகுவதாக தனது சுயரூபத்தைக்காட்டி அந்தப்பரிந்துரைக்கும் ஒத்துழைப்பு வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு பலம் சேர்ப்பதுபோல், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது சிறீலங்கா பௌத்த பேரினவாத அரசின் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தமையே எம் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினைத் தொடரவாய்ப்பளித்தது. அவர்கள், சிறீலங்கா பௌத்த பேரினவாத அரசிற்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பினை வழங்கியிருந்தும்கூட, சிங்கள அரசானது தமிழ் மக்களை வெறுமனே தமது நலன்களுக்காகப் பாவித்தமை மட்டுமே நடந்திருக்கின்றது.
நீதியைப் பெற்றுக்கொடுக்கும் ஒழுங்கில் மட்டும் இன்றைய உலகம் இயங்கவில்லை. வல்லரசுகள், தங்கள் நலன்சார் ரீதியில், பொருளாதார, பூகோள நலன்களுக்குமே முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன. ஏதோவொரு கட்டத்தில், தமது நலன்கள் சிறீலங்கா அரசால் முற்றுமுழுதாக உதாசீனம் செய்யப்பட்டு, அவர்களைப் புறந்தள்ளி செயற்படுகின்ற நிலை உருவாகும்போது, சிறீலங்காவைப் பலவீனப்படுத்தி, இலங்கைத் தீவிலே தங்களுடைய ஆதிக்கத்தை ஏதோவொரு வகையில் நிலைநாட்டுவதற்குரிய தேவை, பூகோள அரசியலில் செல்வாக்குச் செலுத்தும்.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் பூகோள அரசியற்போட்டிகளில் இந்த உண்மைகளை அறிந்து தமிழ் மக்கள் தெளிவுபெறுவது மிகவும் அவசியமானதாகும். தமிழர் தேசத்தின் அரசியலில், தங்களது தேவைகளை மட்டும் நிறைவேற்றக்கூடிய, நிபந்தனையில்லாத ஆதரவைப்பெற, சர்வதேசத்தரப்புகள் விரும்பியிருக்கும் நிலையில், பேரம்பேசலை முன்னிறுத்தும் தரப்புகளைத் தமக்குச் சவாலாகவே பார்ப்பார்கள். அதற்கான தகவல் இருட்டடிப்புகளையும் பொய்யான கருத்துருவாக்கங்களையும் செய்து, தமது நிகழ்ச்சிநிரலுக்கேற்ப தாயகமக்களைத் தயார்ப்படுத்தும் செயற்பாட்டையே செய்வார்கள். இவற்றைத் தகர்த்து, தமிழர் நலன்சார் பேரம்பேசல் மூலமே தமிழீழத்தின் விடுதலை சாத்தியமாகும் என்ற யதார்த்தத்தை, தாயகமக்கள் விளங்கிக்கொள்வதுடன் சர்வேதச சமூகத்திற்கும் உணர்த்த வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும்.
1987 ஆம் ஆண்டில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, 13 ஆம் திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழர் தாயகம் இணைக்கப்பட்டு, தமிழர்களிடத்தில் காணி, காவல், கல்வி போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான தீர்வைக்கூட ஏற்றுக்கொள்ளாத சிங்கள அரசு, தமிழ்மக்களிற்கான நிரந்தரத்தீர்வை வழங்கப்போவதில்லை என்பதை, இந்திய அரசு விளங்கிக்கொண்டு, எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனது பாதுகாப்பிற்கு என்றும் உறுதுணையாக இருக்கக்கூடிய தமிழீழத்தினை அங்கீகரிப்பதன் மூலம், தமிழீழ மக்களைப் பாதுகாப்பதுடன் தனது பாதுகாப்பையும் உறுதிசெய்துகொள்ள முடியும்.
இதற்கான வேலைகளை இன்று, புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் பல வழிகளில் முன்னெடுத்து வருகின்றனர். அறவழிப் போராட்டங்கள், கவனயீர்ப்புப் போராட்டங்கள், கண்காட்சிகள், கருத்தரங்குகள், ஈருருளிப் பயணங்கள், நடை பயணங்கள் என, பல வழிகளில் போராட்டங்களை முன்னெடுத்து, வாழும் நாடுகளில் எமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. அத்துடன், தமிழீழத்தில் நடைபெறும் அடக்குமுறைகளையும் அநீதிகளையும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்விட மொழிகளில் வெளிக்கொண்டு வருவதனூடாக, சிறீலங்கா பௌத்த பேரினவாத அரசின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையைத் தொடர்ந்தும் வெளிக்கொண்டுவருவதன் மூலம் எமக்கான நீதியையும் விடுதலையையும் பெற்றுத்தரும் வகையில் உலக நாடுகளை வலியுறுத்த முடியும்.

இந்தத் தார்மீகப்பொறுப்பில், எமது விடுதலைப் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதற்கு இளையோர், முழுமையான பலமும் வளமுமிக்க சக்தியாக உள்ளனர். அவர்கள், தங்களிடம் உள்ள உறவுகளையும் துறைசார் அறிவினையும் தொழில்நுட்பத்திறனையும் பயன்படுத்தி, இலட்சியத் தெளிவுடன் ஒன்றுபட்டு விரைவாக விடுதலையை வென்றெடுக்கச் செயற்படவேண்டுமென அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்பார்ந்த தமிழக மக்களே!
தமிழீழமக்களின் விடிவுக்காகத் தமிழ்நாட்டு மக்கள் இன்றுவரை குரல்கொடுத்தும், உயிர்த்தியாகங்கள் செய்தும்;; முன்னெடுக்கும் நீதிக்கான போராட்டங்கள், நடுவண் அரசையும் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்கும் போராட்டங்களாகவே உள்ளன. தமிழ்நாட்டுச் சட்டசபையில், மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர்.ஜெயலலிதா அவர்களினால், சிறீலங்காவில் நடைபெற்ற தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், இன்றும் சர்வதேச அரங்கில் வலுப்பெற்றவையாக உள்ளன. இதனை, மேலும் வலுப்படுத்தும் விதமாக அனைத்துத் தமிழ்நாட்டுக் கட்சிகளும் ஒருங்கிணைந்து, வலுவான தீர்மானங்களை நிறைவேற்ற முன்வருவதுடன், கட்சி பேதங்களைக் கடந்து, இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் எமது போராட்டத்தின் நியாயத்தைப் பரப்பவும் ஆதரவைத் திரட்டவும் மென்மேலும் நீங்கள் முயலவேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
எமது தாயகத்தில் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு மிகவேகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதனை நிறுத்துவதற்கும், தமிழ்மக்களுக்கெதிராக நடைபெற்ற போர்க்குற்றம், மனிதநேயத்திற்கெதிரான குற்றம் மற்றும் தொடர்ந்து நடைபெற்றுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்புக்கு எதிராகவும் சுயாதீன சர்வதேச விசாரணைக்கு, இந்திய நடுவண் அரசின் ஆதரவைப் பெறும் வகையில் அழுத்தம் கொடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்வதுடன், எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்காகவும் தொடர்ந்தும் குரல் எழுப்புமாறு வேண்டிநிற்கின்றோம். எமது தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் தமிழக உறவுகளுக்கு எமது அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்பார்ந்த தமிழீழ மக்களே!
தமிழீழத்தில், எம் மக்களின் இருப்பையும் அவர்களது பாதுகாப்பையும் இயல்பான வாழ்க்கையையும் உறுதிப்படுத்த, இன்றைய சூழமைவில் அனைத்துத் தமிழ் மக்களும் தொடர்ந்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற முன்வரவேண்டும். உலக விடுதலை வரலாற்றில், அடக்குமுறைகளிலிருந்தும் அழிவிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடிய மக்களே தமக்கான விடுதலையை மீட்டெடுத்துள்னர். இதனை மனதில் நிறுத்தி, தமிழீழச் சுதந்திரநாட்டின் விடுதலைக்காகத் தொடர்ந்தும் போராடுவோம்.
தாயக மக்களுக்குப் பெரும் பலமாகப் புலம்பெயர்வாழ் உறவுகள் இருந்துவருகின்றனர். எம்மக்களின் பொருளாதாரரீதியான வாழ்வாதாரத்தைப் பேணுவதற்கு, புலம்பெயர்மக்களினது உதவிகள்தான் பலமாக அமைந்திருக்கின்றன. அவ்வகையான பலமான உறவொன்று, புலம்பெயர் தமிழ்மக்களுக்கும் தாயகமக்களுக்கும் இருக்கின்ற சூழலில், எம் தேசத்தின் அங்கீகாரத்திற்கான செயற்பாடுகளையும் தாயகத்தில் தன்னெழுச்சியாக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டத்திற்கும் வலுச்சேர்க்கும்வகையிலும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள், முழுமுயற்சியுடன் தொடர்ந்தும் செயற்படவேண்டும். இன்றும் கோவிட் 19 இன் பேரிடர் காலத்தில், எமது மக்களுக்கான அவசரகால உதவிப்பணியில் ஈடுபட்ட மக்களையும் செயற்பாட்டாளர்களையும் இனவுணர்வாளர்களையும் பாராட்டும் இவ்வேளையில், மிகப்பெரும் பேரழிவுகளின் வலிகளோடு வாழ்ந்துவரும் நாம், இப்பேரிடரிலிருந்தும் எம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வேளையில், சிங்கள அரசின் புலனாய்வுப்பிரிவினரால், தமிழ் மக்களின் ஒற்றுமையினை உடைப்பதற்காகவும், விடுதலைமீது கொண்டுள்ள பற்றுறுதியினை தகர்ப்பதற்காகவும் பலவழிகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இனங்கண்டு, விழிப்புடன் செயற்படுமாறு வேண்டிநிற்கின்றோம்.

இன்றைய உலக ஒழுங்கில், நாடுகள் தங்களின் பூகோள அரசியல்நலனை முன்னிலைப்படுத்திச் செயற்படும் அதேவேளை, மனிதவுரிமைச்சட்டங்களை வைத்தும் அழிக்கப்படும் இனங்களைக் காப்பாற்றிச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்கின்றன. இந்த அடிப்படையில், தொடர்ந்தும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற தமிழீழ மக்களையும் பாரம்பரிய நிலத்தையும் பாதுகாத்து, எம் தமிழீழத்தை அங்கீகரித்து, எம்மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய நிலையினை உருவாக்க, அனைத்துலகக் குமூகம் முன்வரவேண்டுமென வேண்டிநிற்கின்றோம்.
அமைதிவழியில், மென்முறை தழுவி, நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் நாம், எமது போராட்ட இலட்சியத்தையடைய முயன்று வருகின்றோம். காலத்திற்கேற்ப வரலாற்றுக்கட்டாயத்திற்கமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம். ஆனால், எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை என்ற தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கூற்றுக்கமைய, மாவீரர்களின் கனவை எம் நெஞ்சங்களில் சுமந்தபடி, எமது மாவீரர்களின் தியாக வரலாறு எமக்கு வழிகாட்ட, கொள்கைப்பற்றுறுதியுடன் எமது மக்களின் பலத்தில் நின்றவாறே தமிழீழ விடுதலையை வென்றெடுப்போம் என்று இப்புனித நாளில் உறுதியெடுத்துக்கொள்வோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here