உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் ஈழத் தமிழர்கள்: யுனிசெப்!

0
688

unicef-940x500உலகில் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தீவைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற ஐ.நாவின் உப அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

போர், உள்நாட்டுப் பிரச்சினை வன்முறை, இனக்கலவரம் காரணமாக உடமைகள், உறவுகள் மற்றும் உரிமைகளை இழந்து, எவ்வித ஆதரவும், வசதியும் இன்றி வாழும் மக்களே அகதிகள். இவர்கள் சொந்த நாட்டுக்கு உள்ளேயோ அல்லது நாடு கடந்தோ இடம்பெயரும்போது அகதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

உலகில் எல்லா நாடுகளிலும் அரசியல், பொருளாதாரம், உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றனர். பசி, பட்டினி தாங்க முடியாமல், உயிருக்குப் பயந்து அகதிகளாக அருகில் உள்ள நாடுகளுக்கு இடம்பெயருகின்றனர்.

ஆப்ரிக்க கண்டத்தில்தான் முதன்முறையாக ஜூன் 20-ம் தேதி உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு, டிசம்பர் 4-ம் தேதியன்று ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, பல்வேறு காரணங்களால் இடம்பெயரும் மக்களுக்கு ‘அகதிகள்’ அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்துதான், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20-ம் தேதி சர்வதேச அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.சமீபத்தில் வங்கதேசம், மியான்மரில் நடந்த இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்ற நாடுகளுக்கு அகதிகளாக குடியேற முயன்றபோது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 8 லட்சம் அகதிகள் கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். இலங்கை, திபெத் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 4.5 லட்சம் மக்கள் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர்.தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்தும் அகதிகள் இந்தியா உட்பட பல்வேறு ஆசிய நாடுகளில் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

இவ்வுலகில் உள்ள 54 நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 4.5 லட்சம் இலங்கை மக்கள் அகதிகளாக உள்ளனர்.உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தமிழர்கள் என்று ஐ.நா.வின் உப அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது.

உலக அளவில், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களின் சொந்த நாடுகளை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டிருப்பதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இந்தியாவில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் இலங்கை தமிழர்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது, ஆனால், அவர்களின் உயர்கல்வி, பிரஜா உரிமை போன்ற விஷயங்களில் தேக்க நிலை உள்ளது.

இந்தியாவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் சுமார் ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக 113 முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியிலும் வசித்து வருகின்றனர்.

இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைகள் உயர்நிலைக் கல்வி வரை, மற்ற இந்தியர்களைப் போலவே அரசு செலவில் இலவசமாகப் படித்தாலும், அதற்குமேல் உயர்கல்வியைத் தொடர அவர்களுக்கு பொருளாதார ரீதியில் ஆதரவு கிடைக்காததால், அவர்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.

இது தவிர, இந்தியர்களைத் திருமணம் செய்துகொண்டு, குடும்பம் நடத்தி, குழந்தைகளுடன் இருப்பவர்களுக்கு இந்தியக் குடியுரிமை தரப்படாத நிலை பிரச்னையைத் தோற்றுவிக்கிறது.அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமென்றால், உரிய பயண ஆவணம் கிடைப்பதிலும் பிரச்னை ஏற்படுகிறது.

ஆனால், முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு மான்ய உதவித் தொகை மற்றும் ரேஷன் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளை தமிழக அரசு அளித்து வருகிறது. இவ்வாறு இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நிலை குறித்து சர்வதேச குடிபெயர்வு நிறுவனம் (ஐ.ஓ.எம்) சார்பாக, லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் வழக்கறிஞர் ஒருவர் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

உலகளவில் 2014-ம் ஆண்டு வரை சுமார் 9 கோடி மக்கள் அகதிகளாகவும், நாடோடிகளாகவும் உயிர் வாழ்கின்றனர். இன்றைய காலகட்டத்தில், அதிகளவு அகதிகளை உருவாக்கி வரும் நாடாக சிரியா உள்ளது.ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இருந்தே மொத்த அகதிகளில் 60 சதவிகிதம் பேர் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

மேலும், அதிகளவு அகதிகளை (85%) உள்வாங்கும் நாடுகளாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளே திகழ்கின்றன. இது 10 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட 14 சதவிகிதம் அதிகமாகும்.உலகில் அதிக அகதிகளைத் தோற்றுவிக்கும் நாடாக 32 வருடங்களாக ஆப்கானிஸ்தான் விளங்கி வருகிறது. இதில் 95 சதவிகித ஆப்கான் அகதிகள் ஈரானிலும் பாகிஸ்தானிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இதற்கடுத்து 2-ம் இடத்தில் சோமாலியாவும், 3-ம் இடத்தில் ஈராக்கும், 4-வது இடத்தில் சிரியாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இடம்பிடித்துள்ளன.அதே வேளையில், 2014-ம் ஆண்டு இறுதிக்குள் இன்னும் 3 கோடி மக்கள் சிரியா மற்றும் உள்நாட்டு கலவரங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம்.இவர்களில் கணிசமானோர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்திருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு முறை நாம் கண் சிமிட்டும் போதும் அதாவது, 5 நொடிகளுக்கு ஒருமுறை ஒரு அகதி தற்போது உருவாகி வருவதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து, ‘தங்கள் நாட்டில் அடிப்படை வாழ்வாதார வசதிகளுடன் வாழ வழியில்லாத காரணத்தால்தான், அங்குள்ள மக்கள் அருகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்கின்றனர்.

அந்தந்த நாடுகளில் அதிகரித்து வரும் அகதிகளை கட்டுப்படுத்த, சம்மந்தப்பட்ட நாடுகளின் அரசியல் ரீதியான முரண்பாடுகளை களைய, அந்தந்த தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு, அத்தகைய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று ஐ.நா. பொது செயலாளர் பான்-கீ-மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here