தமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை ஈந்த நாயகர்களை – வீரமறவர்களை – மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மக்கள் தயாராகியுள்ளனர்.
தமிழர் தாயகத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றங்களின் தடை உத்தரவுகளைப் காவல்துறையினர் பெற்றுள்ளனர்.
இதனால் மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள் மற்றும் பொது இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று மாலை தமிழர் தாயகத்தில் வீடுகளில் ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர்களை அஞ்சலிக்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
தமிழினத்தின் விடுதலைக்காகக் களமாடி மடிந்த வீரமறவர்களை நினைவுகூர்ந்து இன்று மாலை 6.07 மணியளவில் தமிழர் தாயகத்தில் வீடுகளில் ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலிக்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகாகக் கேட்டுள்ளன.
கடந்த காலம் போன்று இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தலைப் பேரெழுச்சியுடன் அனுஷ்டிப்பதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதானம் செய்யப்பட்டு அஞ்சலி நிகழ்வுகளுக்குத் தயார்ப்படுத்தப்பட்டன.
எனினும், இதற்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும், கொரோனாத் தனிமைப்படுத்தல் சட்டத்தையும் காரணம் காட்டி நீதிமன்றங்களை நாடிய பொலிஸார், நினைவேந்தல் தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளனர்.
இன்று நவம்பர் 27ஆம் திகதி. தமிழரின் உரிமைகளுக்காக ஆயுத வழியில் போராடி தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளை நினைவுகூரும் நாள். எனவே, இந்தக் கடமையை எமது மக்கள் இன்று வீடுகளில் தவறாது செய்ய வேண்டும் – என்று தமிழ்க் கட்சிகள் ஒன்றாகக் கோரிக்கை விடுத்துள்ளன.