வரலாறு எழுதிகளின்
கல்லறையைக் கூடக்
கிளறிப் பார்த்தவன்…
ஏமாந்து போனான்
கார்த்திகை மாத
நினைவதைக் கூடத்
தடுத்துப் பார்த்தவன்…
தடுமாறிப் போனான்
அடிமைகள் நாமென
நினைத்து வந்தவன்
உணர்வதைப் பார்த்து…
உறைந்து போனான்
பொய்களைப் பேசிப்
பணியடா என்றவன்
துணிவதைப் பார்த்துப்…
பயந்து போனான்
நந்திக் கடலுடன்
முடிந்ததாய் நினைத்தவன்
மாறாதகொள்கையைப் பார்த்து…
மயங்கிப் போனான்
காட்டிக் கொடுக்கத்
துணைக்கு வந்தவர்
நடக்காத நாகமாய்…
நகர்ந்து போயினர்
ஈழத்தைப் பார்த்துப்
பொறாமைப் பட்டவர்
இன்னும் இருக்கென…
அச்சம் கொண்டனர்
இத்தனைக்கும்….
அட
இத்தனைக்கும் காரணம்
இந்தக் கார்த்திகை மாதம்
ஊரே கூடித்
தேரில் ஏற்றித்
தொழுகின்ற எங்கள்
குலச் சாமிகள்…
நினைக்கத் தடையெனச்
சொன்னவனைக் கூட
நினைத்துப் பாரெனக்
காட்சிதந்த கடவுளர்…
நெஞ்சம் நிறையக்
கொள்கைத் தீயதைக்
கொளுத்திப் போட்ட
எங்களின் இறைவர்….
வெள்ளாட்டு மந்தைக்குள்
இருந்த…
கறுத்த ஆடுகளைக்
காட்டித்தந்த புனிதர்கள் …
ஈழத்தாயின்
தொழுகை நேரத்தைக்
குறிச்சுத் தந்த
இறைத் தூதர்கள்…
இவர்களை எல்லாம்
மறைக்க நினைத்த
எதிரியே வா….
இன்று ஏழாம் நாள்
இன்றைக்குத் தானடா
எங்கள் திருவிழா…
நெஞ்சம் நிறைய
நினைவுகள் சுமந்து
அவர்களின் மீது
உறுதி எடுத்துக்
கொள்கை மீது
பற்றுக் கொண்டு
இலக்கதை நோக்கிப்
புறப்பட எமக்குத்
துணையாய் வந்து
ஆசிகள் கூறும்
அந்த “இறைவரைப் பார்”
காக்கை வன்னியரே..,
இன்றைக்காவது…..
“கற்றுக் கொள்ளுங்கள்..”
சாவிற்குள்ளும் சமராடி
எவருக்கும் பணியாது
உயிரைக் கொடுத்து
உறங்கிய இவர்களே
எங்களின் இறைவர்…
உங்களுக்காகவும்
வருங்காலம் வரைந்த
வரலாற்று எழுதிகள்
விழுந்து வணங்கி
மன்னிப்புக் கேழுங்கள்…
இவர்களே எமக்குக்
கடவுள்….
இவர்களே எமது
காலம் எழுதிகள்….!
எரிமலைக்காக யேர்மனியில் இருந்து றோய்.
27.11.2020