பிரான்சில் லாகுர்நோவ் நகரசபையில் கடந்த 19.11.2020 அன்று நடைபெற்ற பிரதிநிதிகள் கூட்டத் தொடரில் சிறிலங்காவில் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமை, மனித உரிமை மதிக்கப்படல் வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதனை தமிழீழ மக்கள்பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு இணைந்து லாகுர்நோவ் தமிழ்ச் சங்கத்தின் உதவியுடன் நகரசபையில் தெரிவாகி உள்ள தமிழ்பேசும் பிரதிநிதிகளின் ஆதரவோடு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.
லாகுர்நோவ் நகரில் தமிழர்கள் இருப்பதால் அவர்களது வாழ்வு தாய்நாட்டின் நிலைமையோடு இணைந்துள்ளது என்பதைக் கருத்தில்கொண்டும்,
தமிழ்மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், பத்திரிகையாளர் மீதான தாக்குதல்கள், மனிதவுரிமை அமைப்புகள் மீதான தாக்குதல்கள் இலங்கையில் நடந்து வருவதை பல மனிதவுரிமை அமைப்புகள் கண்காணித்துள்ளன என்பதையும் கருத்திற்கொண்டும்
ஐ.நா. மனிதவுரிமைச் சபைத் தீர்மானம் 30/1 இல்லிருந்து ஒருதலைப்பட்சமாக சிறிலங்கா அரசாங்கம் விலகிக் கொண்டு, பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நீதிக்கான பொறுப்புக் கூறல் தொடர்பாக கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் உள்ளதை கருத்தில் கொண்டும், அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும், அகிம்சை வழியில் போராடும் உரிமை உண்டு, இறந்த மக்களை நினைவுகூரும் உரிமை உள்ளதைக் கருத்திற் கொண்டும்
19.11.2020 அன்று நகரசபையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவில் சமாதானம், மனிதஉரிமை, சர்வதேச உரிமை மதிக்கப்படவேண்டுமென உழைக்கும் உலக அமைப்புகளுக்கு ஆதரவை தெரிவிக்கின்றோம் என பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன:
பிரான்சு சனாதிபதி சிறிலங்கா அதிகார பீடத்திடம் வலியுறுத்தக் கோரி
• மனித உரிமைதொடர்பான சர்வதேச விதிமுறையை அமுல்படுத்த வேண்டும்.
• தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அமைதி வழியில் கிடைப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதோடு, ஊடக மற்றும் கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்த வேண்டுமென்றும்
• அரசியல் கைதிகள் விடுதலையை ஆதரிக்கவேண்டுமென்றும்
• சிறிலங்காவில் 30 ஆண்டுப்போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு உதவவேண்டுமென்றும், சமதானத்திற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதிகிடைப்பதற்கு வெளிப்படையான விசாரணையை வலியுறுத்த வேண்டுமென்றும்
இத்தீர்மானத்தின் மூலம் கேட்கப்பட்டுள்ளது.