சுன்னாகம், மல்லாகம், ஏழாலை, தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை ஆகியபகுதிகளை அபாயகரமான பகுதிகளாகக் கணித்து, பொலிஸ், அதிரடிப்படை மூலம் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார். தெரு ரவுடித்தனம் செய்து தனியார் வகுப்பு மாணவ மாணவிகளை அச்சுறுத்தி, கல்வி நிலையத்தின் கதவை உடைத்து, ஒருவருக்குக் காயத்தை ஏற்படுத்தி, பல மணிநேரம் அட்டகாசம் புரிந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல கல்லூரி மாணவர்கள் இருவர் உட்பட நால்வருக்கு, பிணையில் வெளிவரமுடியாத வகையில் மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
குறித்த தீர்ப்புக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போதே, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். தெரு ரவுடித்தனத்தில் ஈடுபட்ட இந்தச் சம்பவம் சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்ட நீதிபதி இளஞ்செழியன், சுன்னாகம், மல்லாகம், ஏழாலை தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களில், குற்றச் செயல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
இங்கு இடம்பெறுகின்ற கொள்ளை, கோஸ்டி மோதல்கள் அங்குள்ள மக்களை அச்சத்தில் உறையச் செய்திருக்கின்றன. அதேபோல ஊர்காவற்றுறை பகுதியில் மண் கடத்தல், மாடு கடத்தல் தெரு சண்டித்தனம், ரவுடித்தனம் போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார். சண்டித்தனம், தெருச் சண்டித்தனத்திற்கு ஓர் அளவு உண்டு. இப்பொழுது எல்லாம் கைமீறிவிட்டது. எனவே குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.
குற்றவாளிகளுக்கு தண்டனை விதித்தே ஆக வேண்டும் என்பது இப்போதைய காலத்தின் தேவையாக உள்ளது. குற்றம் செய்பவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். பிடியாணை பிறப்பிக்கப்படுபவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனவே, இந்தப் பகுதிகளில், பொலிஸ் மற்றும் அதிரடிப்படையின் துணை கொண்டு சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படும். பொது மக்கள் அமைதியாகவும், சமாதானமாகவும் வாழ்வதற்கு ஏதுவாக சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட, நீதிமன்றம் தனது கடமையைச் செய்யும். ஆசியாவின் ஆச்சரியமான நூல் நிலையம் இருந்த யாழ்ப்பாணம் அன்று புத்திஜீவிகளின் சாம்பராஜ்ஜியமாக இருந்தது. இன்றோ, கத்தியைத் தீட்டுபவர்கள் நிறைந்த சமுதாயமாக அது மாறியிருப்பது வருந்தத்தக்கது என நீதிபதி சுட்டிக்காட்டினார்.
மல்லாகம் நீதிபதியினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீட்டு பிணை மனு மீதான விசாரணையின்போது, எதிரிகள் தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, குற்றம் சாட்டப்பட்ட நால்வரில் இருவர் பிரபல கல்லூரி மாணவர்கள் என்றும், அவர்கள் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாகவும், எனவே, அவர்களின் எதிர்காலம் ஒளிர, அவர்கள் மீது கருணை காட்டி, அவர்களுக்குப் பிணை வழங்க வேண்டும் என கோரினார். அதற்குப் பதிலளித்த மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், கல்லூரி மாணவனாக இருந்தாலென்ன, பல்கலைக்கழக மாணவனாக இருந்தாலென்ன, நீதிமன்றத்தில் விசேட கவனிப்பு எவருக்கும் கிடையாது. யாவரும் சமம். அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். படித்தவனுக்கு ஒரு நிதி, படிக்காதவனுக்கு ஒரு நீதி என, நீதி வழங்க முடியாது என தெரிவித்தார். அப்போது இந்த மாணவர்கள் உயர்தரப் பரீட்சை எழுதாமல் விட்டால், அவர்களுடைய எதிர்காலம் சூனியமாகிவிடும். எனவே, அந்த மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, பிணை விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்ய வேண்டும் என எதிரிகள் தரப்பு சட்டத்தரணி வேண்டிக்கொண்டார். இதனையடுத்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகள், முற்குற்றம் செய்திருக்கின்றார்களா, இவர்களுக்கு வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் உள்ளதா அல்லது இவர்கள், குற்றம் செய்வதையே வழக்கமாகக் கொண்ட நபர்களா என்பது குறித்து சுன்னாகம் பொலிசாரிடமிருந்து அறிக்கை பெற்று, நீதிமன்றத்தில் அதனைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதி அரச சட்டத்தரணியிடம் கேட்டுக்கொண்டார். அதேவேளை, சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்த நீதிபதி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதா இல்லையா என்பது தொடர்பான விவாதத்தையும் தீர்ப்பையும் எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளார்.
Home
சிறப்பு செய்திகள் யாழில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு: அபாயகரமான பகுதிகளை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவிப்பு!