எனது தாய்க்கும், தாய்மொழிக்கும் சமமான தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 66-ஆம் அகவை தினத்தை, உலகம் முழுக்க வாழ்கின்ற தமிழர்கள் மட்டுமல்லாது தமிழ் இனத்தின் இளைய தலைமுறையினர் தலை நிமிர்வோடு கொண்டாடுகிறோம்.
1954 ஆம் ஆண்டு தமிழீழ மண்ணில் , கருணை மிக்க கருவைச் சுமந்து ஒரு தாய் தனது சரிந்த வயிறோடு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலங்கைத் தீவினை ஈரத்தோடும் வீரத்தோடும் கட்டி ஆண்ட எல்லாளன் சமாதிக்கு சென்று சூடம் ஏற்றி வணங்கி, உன்னைப் போலவே எனக்கு மகன் பிறக்கணும், இந்த மண்ணில் வாழ்கிற எமது மக்கள் மகிழ்வோடு வாழ அவன் அரசாட்சி செய்யணும் என்று வேண்டிக் கொள்கிறாள். வேண்டியது போலவே பேரழகோடு பிள்ளை ஒன்று பிறக்கிறது அந்தப் பிள்ளைக்கு உலகத்திற்கே ஒளி கொடுக்கும் சூரியனின் பொருள் கொண்டு “பிரபாகரன்” என பெயர் சூட்டப்படுகிறது.
ஏழு அல்லது எட்டு அகவையில் தன் தந்தையின் விரல் பிடித்து தமிழர் சாலை வழி கடக்கும் போது தமிழர்களுக்கு நடக்கின்ற வன்முறைகளை உள்வாங்கி தந்தையிடம் தனது முதல் கேள்வியை வைக்கிறான் அச்சிறுவன் ” அடிக்கிற அவங்கள நாம ஏம்பா திருப்பி அடிக்கல?”.
தாயின் எதிர்பார்ப்பின் படியே தலை நிமிர்வோடு வளர்ந்த அச்சிறுவன் எதிரியை விட துரோகியே முதலில் வீழ்த்தப்பட வேண்டியவன் என முடிவுசெய்து தமிழர் களுக்கு தொடர்ந்து இன்னல்கள் தந்த ஆல்பர்ட் துரையப்பாவை களையெடுத்தார் , சிறுவனுக்கு பிந்திய மற்றும் இளைஞனுக்கு முந்தைய பருவத்திலிருந்த எம் தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள். அவரை ஈழம் முழுக்க இரும்புக்கரம் கொண்டு எதிரிகள் தேடிய போதும், ஒரு மாத காலம் வரை புறாக்களின் எச்சங்களோடும், வவ்வால்களின் புழுக்கைகளோடும் நல்லூர் முருகன் கோயிலின் உச்சி கோபுரத்தில் தங்கியிருந்து எம் இனத்தின் விடியலுக்கான வியூகம் அமைத்து வன்னிக்காட்டில் படையை கட்டியவர், பண்டாரவன்னியனின் பரம்பரை நீட்சியான எம் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசிய நாடுகளை முழுக்க கட்டி ஆண்ட எம் மாமன்னர்கள் ராஜராஜ சோழனும் , ராஜேந்திர சோழனும் கூட தரைப்படை மற்றும் கப்பல் படை மட்டுமே வைத்திருந்தார்கள். ஆனால் எம் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களோ ஒரு படி மேலே சென்று வான் படையையும் கட்டியமைத்து முப்படை கண்ட முதல் தமிழ் மன்னன் என்கிற பெருமித வரலாற்றை உலகத்திற்கு பிரகடனப்படுத்தினார்.
சிங்கள அதிகார வர்க்கம் பல வல்லரசுகளோடு இணைந்து நின்று மனித குலத்தால் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை வீசியும், ரசாயன குண்டுகளை பொழிந்தும், எம் குழந்தைகள், பெண்கள் முதியவர்கள் என எம் உறவுகளை ரத்த சகதியிலாழ்த்தி நந்திக்கடலை செங்கடலாக மாற்றிய போதும் அறம் சுமந்து மரபு வழி நின்று போராடியவர் எம் தலைவர். ஆனால் சிங்களர்களின் போர் முறை போன்றே நாமும் பதிலுக்கு பதிலடி தந்து சில நிமிடங்களுக்குள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என தலைவருடன் உடனிருந்த சிலர் ஆலோசனை தர, அவரோ அதை மறுத்து “நமக்கு எதிரி நம்மை அழிக்க துடிக்கும் சிங்கள அதிகார வர்க்கமேதவிர
அவர்கள் வீட்டுப் பெண்களும், குழந்தைகளும் அல்ல. நம் வீட்டுப் பிள்ளைகளும் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளும் வேறு வேறல்ல. அவர்கள் செய்யும் தவறுக்கு , பாவம் இவர்கள் என்ன செய்வார்கள்?!, காலமும் இயற்கையும் நமக்கான விடுதலையைப் பெற்றுத் தரும்” என்று கூறி நேர்மையோடு நின்று மரபுவழியில் போரை நடத்திய அறம் மிகுந்த தலைவர் மட்டுமல்ல, எதிரியின் குடும்பத்திற்கும் கருணை காட்டிய மனித நேயமிக்க தலைவர் எம் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள். அப்படிப்பட்ட எம் தலைவரான எங்களின் பாசமிகு அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் காட்டிய பெருவெளிச்ச பாதையில் உறுதியுடன் பயணித்து, எமது தமிழீழ மண்ணின் விடுதலையை வென்றெடுத்தே தீருவோம் என எம் தலைவரின் பிறந்த நாளான நவம்பர் 26 – இல் நமது உயிரினில் உயில் எழுதி உறுதி ஏற்போம்.
வெல்வோம்!
தமிழரின் தாகம்!!
தமிழீழத் தாயகம்!!!.
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
தமிழ்நாடு.
24.11.2020