மகாகவி பாரதியார் கண்ட கனவுகள், இப்போது நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. அன்று அவர், சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாடினார்.அது நிறைவேறப் போகிறது என்ற வகையில், மத்திய அரசாங்கத்தின் முயற்சிகள் நம்பிக்கையை ஊட்டியி ருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள ராமேசுவரத்தில் இருந்து இலங்கையை சாலை போக்குவரத்து மற்றும் ரெயில் பாதைகள் மூலமாக இணைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கம் அதிக அக்கறை காட்டி வருகிறது. பாக்ஜல சந்தியில் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கடலில் பெரும்பகுதி தூரத்துக்கு பாலமும், ஒரு சிறிய பகுதியில் கடலுக்கு அடியில் சுரங்கப் பாதையும் அமைப்பதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதி கேட்டு ஒரு திட்ட த்தை மத்திய அரசாங்கம் அனுப்பியுள்ளது.
ராமேசுவரத்தில் உள்ள தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு 22 முதல் 23 கிலோ மீற்றர் தூரம்தான் இருக்கிறது. ஆழம் சற்று குறைவாக உள்ள இடங்களில் தூண்களை நட்டு பாலம் அமைக்க முடியும். ஆழம் அதிகமான இடங்களில் சுரங்கப் பாதை அமைத்தால அந்த இடம் வழியாக கப்பல் செல்ல முடியும்.
ஒரு பெரிய மனநிறைவு எது என்றால் இந்த திட்டத்தினால் சேது சமுத்திர திட்டத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்ற உறுதிதான். உலகில் பல இடங்களில் இப்படி கடலுக்கு அடியில் சுரங்கப்பதைகள் இருக்கின்றன. ஏற்கனவே வங்காளதேசம், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளோடு சாலைவழியாக பயணி கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு இந் தியா ஒப்பந்தங்கள் போட்டு கையெழுத் திட்ட நிலையில், இந்த திட்டமும் நிறை வேறினால் சார்க் நாடுகளை யெல்லாம் சாலை மூலமாக இணைத்துள்ள பெருமையை பெறமுடியும்.
இது மட்டுமல்லாமல், ராமேஸ்வரத்துக்கு செல்ல வேண்டுமானால் பாம்பன் கால்வாயைக் கடந்துதான் செல்ல வேண்டும். தற்போது இந்த கால்வாய் வழியாக ஆயிரம் டன் எடையுள்ள சரக்கு கப்பல்கள்தான் செல்ல முடிகிறது. பெரிய கப்பல்கள் செல்லும் வகையில் இன்னும் ஆழப்படுத்துவதற்கான விரிவான ஆய்வுகளும் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மத்திய அரசாங்கம் முயற்சி எடுத்து வரும் இந்த பாலம் மட்டும் அமைந்துவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர வர்த்தகம் தழைக்கும், பயணிகள் போக்குவரத்தும் மேம்படும், சுற்றுலா வளரும், எல்லாவற்றுக்கும் மேலாக நட்பு பாலத்துக்கும் உதவியாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கும். இலங்கைக்கும் இடையே கடல்வழி சரக்கு போக்குவரத்து மிகவும் அதிகமாக இருந்தது.
தூத்துக்குடியில் இருந்து தோணிகள் மூலமாக இலங்கைக்கு கருவாடு, மசாலா பொருட்கள், ஆடுகள், கோழிகள், மூலிகை இலைகள் என்று பல பொருட்கள் ஏற்றுமதியாகிக் கொண்டேயிருக்கும். இவ்வளவுக்கும் பாய்மரத்தினால் இயக்கப்பட்ட அந்த தோணிகள் இரவு 10 மணிக்கு புறப்பட்டால் அடுத்த நாள் மதியம் இலங்கைக்கு சென்றுவிடும். அங்கிருந்து தேங்காய், தேங்காய் எண்ணெய், மாசி போன்ற பல பொருட்களை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு வந்துவிடும்.
1977 ல் தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை இலங்கை பின்பற்றத் தொடங்கிய நேரத்தில்தான், இந்தியாவில் இருந்து அசோக் லேலண்டு போன்ற நிறுவனங்கள் அங்கு தொழிற்சாலைகளைத் தொடங்கின.
1990 களிலும், 2000 ஆம் ஆண்டிலும் பல இந்திய தொழில்கள் இலங்கையில் காலூன்றின. இந்த பாலம் அமைக்கப்பட்டால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி அதிகமாகவும், மின்சார வயர்கள் போன்ற சில பொருட்கள் இயற்குமதியும் இருக்கும். வர்த்தகம், பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும்.