ராஜபக்ச 3–வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டார்.
ராஜபக்சவின் திருப்பதி வருகைக்கு ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், தமிழர் வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழர் தேசிய இயக்கம் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் ராஜபக்ச வரும் போது திருப்பதியில் கருப்பு கொடி காட்டவும் திட்டமிட்டு இருந்தன.
இதையடுத்து திருப்பதியிலும், திருமலையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தமிழகத்தில் இருந்து திருப்பதி வரும் சாலையில் ஆந்திர எல்லையில் அம்மாநில போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருப்பதியில் உள்ள அனைத்து விடுதிகளில் பக்தர்கள் தவிர வேறு யாரும் தங்கி இருக்கிறார்களா? என்று போலீசார் சோதனை நடத்தினார்கள். பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களிலும் கண்காணித்தனர்.
திட்டமிட்டபடி ராஜபக்ச நேற்று மாலை 4.30 மணி அளவில் தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தார். அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் கீழ் திருப்பதியில் உள்ள தாரகிராமா மைதானத்தில் சென்று இறங்கினார்.
பின்னர் கார் மூலம் திருமலைக்குச் சென்றார். ராஜபக்சவுக்காக அங்கு வழக்கமாக நடைபெறும் அங்க பிரதட்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் ரத்து செய்யப்பட்டு மற்ற பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வுவெடுத்துக்கொண்டு காலை 8 மணியளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு வந்தார். பின்னர் ஹெலிகாப்டரில் ரேணிகுண்டா சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் கொழும்பு சென்றார்.
ராஜபக்சே திருப்பதியில் இருந்து திருமலைக்கு காரில் செல்லும் போதும், திரும்பும் போதும், அலிபிரியில் இருந்து திருமலைக்கு அனைத்து வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அவர் சென்ற பின்தான் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் தங்கள் வாகனங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். திருப்பதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.
ராஜபக்சே தங்கி இருந்த விருந்தினர் மாளிகை அருகே பத்திரிகையாளர்கள், டி.வி., வீடியோகிராபர்கள் கூடி இருந்தனர். அவர்கள் யாரையும் போலீசார் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விட்டனர்.
ராஜபக்சே சாமி தரிசனம் செய்ய சென்ற போது தொலைவில் இருந்து தான் பத்திரிகை புகைப்படக்காரர்களும், வீடியோ கிராபர்களும் படம் பிடித்தனர். அவர்களது காமிராகள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ராஜபக்சே தங்கி இருந்த பகுதியில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் ஆந்திர போலீசார் மட்டுமின்றி இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே ராஜபக்சேவை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்காக சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னையில் இருந்து ம.தி.மு.க.வினர், விடுதலை சிறுத்தை கட்சியினர் 500–க்கும் மேற்பட்டோர் திருப்பதிக்கு சென்றனர்.
திருப்பதி பஸ் நிலையம் அருகே அம்பேத்கர் சிலை அருகே அவர்கள் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ராஜபக்சேவுக்கு கருப்பு கொடி காட்டுவதற்காக தமிழகத்தில் இருந்து தமிழ் அமைப்பினர் 300 பேர் 77 கார்களில் ஆந்திராவுக்கு புறப்பட்டு சென்றனர்.
நெல்லூர் மாவட்டம் தடா அருகே பன்னங்காடு என்ற இடத்தில் 300 பேரையும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து அவர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கேயே போராட்டம் நடத்தி ராஜபக்சே உருவபொம்மையை எரித் தனர்.
ரேணிகுண்டாவில் ராஜபக்சேவுக்கு கருப்பு கொடி காட்டமுயன்ற ம.தி.மு.க. நிர்வாகி குமார் மற்றும் ம.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். திருப்பதி பேரி தெருவில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் அமைப்பினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர். நகரியில் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்திய 15 பேர் கைதானார்கள். ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக மொத்தம் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருத்தணியில் ம.தி.மு.க.வினர் திருப்பதி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு ராஜபக்ச உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ராஜபக்சே திருமலையில் தங்கிருந்த போது விருந்தினர் மாளிகை எதிரே திடீர் என்று ம.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை ஆந்திர போலீசார் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. மோதலை படம் பிடித்த பத்திரிகை போட்டோகிராபர்கள் வீடியோ கிராபர்கள் மீது ஆந்திர போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன், தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராஜபக்சவுடன் மகன்கள் கோகிதா ராஜபக்சே, ரோகிதா ராஜபக்சே ஆகியோரும் வந்தனர்.