நந்திக் கடல்வரை
சென்று வந்தவர்
நெஞ்சை நிமிர்த்தி
எழுந்து இருங்கள்
வஞ்சிக்கப்பட்ட
எங்கள் இனத்தின்
மௌனத்தைப் பற்றி
எழுத வேண்டும்
நினைத்துப் பார்க்கத்
தடையெனச் சொன்னவன்
எழுதி வைக்கத்
தடையா போட்டான்
ஐந்தாம் நாளில்
உறுதி எடுத்து
வரலாறை நாமே
எழுதி வைப்போம்
கஞ்சி ஊத்திக்
காத்த உயிர்களின்
இறுதி மூச்சைக்
கண்டவர் நாங்கள்
காப்பரன் போட்டுக்
காத்த அவர்களின்
கதைகளை நாமே
எழுத வேண்டும்
கற்பனை கடந்து
கண்ட காட்சிகள்
கண்ணுக்குள் தானே
இன்னும் இருக்குது
அன்று தொட்டு
இன்று வரைக்கும்
வஞ்சகர் சூழ்ச்சி
கண்டவர் நாங்கள்..
ஆதியில் இருந்து
வந்த வரலாறை
இடையினில் இவர்கள்
மாத்தி எழுதி
மார்தட்டிக் கொள்வதைப்
பார்த்த பிறகும்….
இறுதிச் சமரென
இவர்கள் சொல்லி
இப்போதே எழுத
தொடங்கிய பிறகும் …
ஈழத்தைக் காக்க
இறைவனாய்ப் போன
எங்கள் இனத்தின்
இறுதி மூச்சை
நினைத்துப் பார்க்கத்
தடையெனச் சொன்னபிறகும்…
இவர்களை நம்ப
முடியுமா…? சொல்லும்
அதனால்…
அந்தக் காலக்
கல்வெட்டுப் போல…
அதுக்குப் பிறகு
எழுதி வைச்ச
ஏடுகள் போல…
இந்தக் கால
இணையத்தில் நாமே
எழுதி வைப்போம்
எங்களின் போரை….
எத்தனை குண்டுகள்
போட்டான் என்பதும்
எப்படி எம்மைக்
கொன்றான் என்பதும்
நேரில் பார்த்த
கண்கள் அல்லவா
இப்போதும் எம்முடன்
இன்னும் இருக்குது…
கண்ணை மூடிப்
பாருங்கள் அந்தக்
கடைசி நேரக்
காட்சிகள் தெரியும்
கற்பனை செய்து
எழுத வேண்டாம்
அதுக்காய் எதிரி
இருக்கிறான் இன்னும்
உண்மைக் கதைக்குச்
சாட்சிகள் எதுக்கு…?
ஊமையைப் போல
இருந்தது போதும்
எதிரி சொல்லும்
இறுதிப் போரில்
இறந்தவர் எல்லாம்
எமக்குத் தெரியும்…
இழந்தவை கூடக்
கணக்கில் இருக்கு…
கைதாகிப் போனவர்
கதைகள் தெரியும்….
எதிரியின் படையில்
துணைக்கு வந்தவர்…
காட்டிக் கொடுக்க
முகமூடி போட்டவர்…
எல்லார் கதையும்
கண்டு வந்ததை…
எழுதி வைச்சு
அஞ்சலி செய்வோம்
வருங்காலம் அதனைப்
படிக்க வேண்டும்
வீரர்கள் கதையதைத்
தெரிய வேண்டும்…
வரலாற்றில் எமது
கடமை இதுவே…
கிளறிய கற்கள்
இருந்த இடங்களும்
கீறி வைத்துக்
காத்திட வேண்டும்
நாளைய விடுதலை
நாளினில் இவையே
எமக்குத் துணையாய்
சாட்சி சொல்லும்
நெஞ்சை நிமிர்த்தி
எழுந்து இருப்போம்
நந்திக் கடல்வரை
போனவர் நாங்கள்
மீண்டு வந்ததே
இதுக்காய்த் தானே….
கற்பனை கடந்து
மெய்யதை எழுதி
வரலாற்றில் எமது
கடமையைச் செய்ய
கார்த்திகைத் திருவிழா
ஐந்தாம் நாளில்
அந்த இறைவர்கள் மீது
உறுதி எடுப்போம்.
எரிமலைக்காக யேர்மளியில் இருந்து
றோய் மதி.