பொதுமுடக்கத்தை டிசெம்பர் 15 ஆம் திகதி நீக்கிவிட்டு அன்று முதல் இரவு ஊரடங்கு விதிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.ஆயினும் நத்தார், புத்தாண்டு இரவுகளில் மட்டும் மக்கள் கட்டுப்பாடின்றி நடமாட அனுமதிக்கப்
படுவர். உணவகங்களை ஜனவரி 20 இல் திறக்க உத்தேசம். வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட மாட்டாது.
அதிபர் மக்ரோன் இன்றிரவு தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியின் முக்கிய சாராம்சம் இது.
சுகாதார நிலவரத்தைப் பொறுத்து தற்போது நடைமுறையில் உள்ள பொது முடக்கக் கட்டுப்பாடுகள் (Le confinement) வரும் டிசெம்பர் 15 ஆம் திகதி நீக்கப்படலாம். பொதுமுடக்கத்தை நீக்கிவிட்டு அன்றைய தினத்தில் இருந்தே இரவு ஊரடங்கு(couvre-feu) உத்தரவு நாடு முழுவதும் அமுல் செய்யப்படும்.
இரவு 21 மணி முதல் மறுநாள் காலை 07 மணிவரை நடைமுறைப் படுத்தப்படவிருக்கும் அந்த ஊரடங்கு, நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டிசெம்பர் 24 ,டிசெம்பர் 31 ஆகிய இரண்டு இரவுகளில் மட்டும் முற்றாக நீக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவர்.
தொற்று நிலைவரத்தைப் பொறுத்து உணவகங்களும் அருந்தகங்களும் உள்ளக விளையாட்டு அரங்குகளும் ஜனவரி 20 ஆம் திகதி முதல் இயங்க அனுமதிக்கப்படும்.
தற்போது மூடப்பட்டிருக்கும் அத்தியாவசியமற்ற கடைகள், வர்த்தக ஸ்தாபனங்கள் அனைத்தும் எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை முதல் திறக்கப்படும்.மத வழிபாட்டுத் தலங்களையும் அன்றைய தினம் திறந்து வழிபட அனுமதிக்கப்படுகிறது. ஒரு சமயத்தில் 30 பேர் என்ற எண்ணிக்கையில் பிரார்த்தனைகளில் கலந்துகொள்ள முடியும்.
தற்சமயம் ஒரு கிலோ மீற்றர் தூரம், ஒரு மணி நேரம் என்ற அடிப்படையில் உள்ள நடமாடும் கட்டுப்பாட்டு விதிகள் (Les déplacements autorisés) வரும் சனிக்கிழமை தொடக்கம் 20 கிலோ மீற்றர்கள் தூரம் மூன்று மணிநேரம் என்றவாறு தளர்த்தப்படுகின்றன.
இத் தகவல்களை மக்ரோன் தனது உரையில் வெளியிட்டார்.
மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய குழு ஒன்றின் வழிநடத்தலில் வைரஸ் தடுப்பூசி ஏற்றும் நாடளாவிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும். ஆனால் தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட மாட்டாது – என்ற தகவலையும் அவர் அறிவித்தார்.
நாடு வைரஸின் இரண்டாவது அலையின் உச்சக் கட்டத்தை தாண்டிவிட்டது என்பதை உறுதிப்படுத்திய மக்ரோன், மூன்றாவது பொது முடக்கம் ஒன்றைத் தவிர்ப்பதற்காக தற்போதைய சுகாதாரக் கட்டுப்பாடுகளை இரு மடங்கு கண்டிப்பாகக் கடைப்பிடிக்க முன்வருமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
குமாரதாஸன். பாரிஸ்.
24-11-2020