மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கக் கோரும் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்துறையினரின் விண்ணப்பம் மீதான விசாரணை நாளை 25ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டது.
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தலை நடத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க.சுகாஷ், மாநகரசபை உறுப்பினர்கள் வரதராஜா பார்த்திபன், மயூரன் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக கட்டளை வழங்குமாறு இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.
தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் மாவீரர்களை நினைகூர நவம்பர் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த மாவீரர் வார நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கட்டளை வழங்கவேண்டும் என்று காவல்துறையினர் விண்ணப்பத்தில் கேட்டுள்ளனர்.
அத்துடன் கொரோனா தொற்று தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தையும் காவல்துறையினர் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தனர். பிரதிவாதிகளில் பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஷ் உள்ளிட்டோர் கடந்த வெள்ளிக்கிழமை மன்றில் முன்னிலையாகி காவல்துறையினரின் விண்ணப்பத்துக்கு கடும் ஆட்சேபனையை முன்வைத்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்குத் தொடுநர் சார்பில் சிரேஷ்ட பிரதி மன்றாடியார் அதிபதி பிரபாகரன் குமாரரட்ணம் இன்று பிற்பகல் மன்றில் முன்னிலையாவார் என்று அரச சட்டவாதியால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும் காலநிலை சீரின்மையால் அவர் நாளை காலை மன்றில் முன்னிலையாவார் என்று அரச சட்டவாதி ச.யாதவன் மன்றுக்கு அறிவித்தார்.
இதனையடுத்து வழக்கு நாளை முற்பகல் 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.