தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு திரை மறைவில் சதி:சி. வி. விக்னேஸ்வரன்

0
898

vikiவடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு திரை மறைவில் சதி நடப்பதாகவும், உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தி தமது இந்த எண்ணத்தை நிறைவேற்றச் சிலர் துடிப்பதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இச்சதிக்கு தமிழ்க் கூட்டமைப்பிற்குள் இருக்கும் சிலரையே அவர்கள் பாவித்து வருவதாகவும், இது புரியாது எம்மவர் சிலரும் அத்தீய எண்ணத்திற்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ பலிக்கடாவாகி வருவதாகவும் முதலமைச்சர் விக்னேஸ் வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தத் தீய எண்ணம் கொண்டவர்களின் மாயை வலைக்குள் எவ்வ கையிலும் சிக்கிவிடாது தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள சகல தலைமைகளும் தமக்கிடையே ஒற்றுமையை மேலும் பலப்படுத்தி தமிழ் மக்களுக்கான சேவை எனும் உயரிய ஒரேயொரு சிந்தனைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தனது கருத்துக்கள், அறிக்கைகள் அல்லது உரைகள் எந்தவொரு தனிநபர் மீதும் கொண்ட காழ்ப்புணர்வினாலோ அல்லது ஒரு சிலர் போல பதவி ஆசையினாலோ தெரிவிக்கப்படுவது அல்ல. மாறாக மக்களுக்கான சேவை, தமிழ் அரசியல் தலைமைகளுக்கிடையிலான ஒற்றுமை என்பவற்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையின் தமிழ் தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக சில சக்திகள், தமிழ் சமூகத்தின் மத்தியில் டொலர்களை விநியோகிக்கின்றன என்றும் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழர் தலைமைத்துவத்தை மாற்ற நினைக்கும் இந்த சக்திகள், போருக்கு பின்னர் தமிழ் சமூகத்துக்கு எவ்வித உதவிகளையும் செய்யவில்லை. எனினும் தற்போது அந்த சக்திகள், பல்லாயிரம் டொலர்களை செலவழித்து தமிழ் தலைமைத்துவத்தை நிலைகுலைய செய்ய முயற்சிக்கின்றன. எனவே தமிழ் மக்கள் இந்த சக்திகளுக்கு எதிராக செயற்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

தலைவர்களான செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஆகியோருக்கு பின்னர் தமிழ் தலைமைத்துவத்தை சிறப்பாக ஆர். சம்பந்தன் முன்னெடுத்து வருகிறார் என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here